காவலர்கள் பதவி உயர்வை திரும்பப்பெற வேண்டும்..EPS வலியுறுத்தல்!
20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகக் காவல்துறை காவலர்களிடையே பாரபட்சம் காட்டும் வகையில் வெளியிட்ட பதவி உயர்வு உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-‘சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்’ என்று வாயளவில் நாடக வசனம் முழங்கிவிட்டு, ‘சொல் வேறு, செயல் வேறு’ என்று செயல்படுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார், காவல்துறையை கையில் வைத்திருக்கும் பொம்மை முதல்-அமைச்சர் ஸ்டாலின்.
தமிழகக் காவல் துறையில் துவக்க நிலையில் பணியில் சேரும் காவலர்களுக்கு பணி மூப்பின் அடிப்படையில் (10+5+10) என்ற முறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. தற்போதுள்ள நடைமுறையின்படி, 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, அதவாது 25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாகவும் பதவி உயர்வு பெறுவார்கள்.
கடந்த 2021 தி.மு.க. தேர்தல் அறிக்கை எண்.389-ல், 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளனர். ஓட்டுக்காக வாக்குறுதி அளிப்பதும், அதிகாரம் கைக்கு வந்தவுடன் அவைகளைக் காற்றிலே பறக்கவிடுவதும் தி.மு.க.விற்கு கை வந்த கலை.
மக்களைக் காக்கும் பணியில் உள்ள பெரும்பாலான காவலர்கள் பாதிக்கப்படக்கூடிய இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்றும், பணியில் உள்ள காவலர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், 2021-ல் தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும், தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.