கிஸ்தி vs சொத்து வரி! டாக்டர் ஆ.ஹென்றி விளக்கம்
![]()
கிஸ்தி என்பது முகலாயர் ஆட்சிக் காலத்தில் நில வருவாயைக் குறிக்கும் சமஸ்கிருத மூலத்தைக் கொண்ட ஒரு சொல். ஒருவனிடம் எவ்வளவு நிலம் உள்ளதோ அந்த நில அளவுக்கும் வகைப்பாட்டுக்கும் ஏற்ப விதிக்கும் நில வரி வகையே கிஸ்தி என கூறப்பட்டது.
கிஸ்தி இந்த வார்த்தையை கேட்டவுடன் நம் அனைவரின் நினைவிற்கு வருவது வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஆங்கிலேய அரசிற்கு எதிராக பேசும் கிஸ்தி, திரை, வரி, வட்டி! “யாரை கேட்கிறாய் கிஸ்தி?” என திரையில் அதிர்ந்த வசனம். அன்று அந்நிய நாட்டு மன்னர்களுக்குக் கட்டிய வரி அடிமைத்தனத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. ஆனால், இன்று மக்களாட்சியில் நாம் செலுத்தும் வரி என்பது நமது நிலத்தின் மீதான நமது சட்டப்பூர்வ அதிகாரத்தை (Legal Rights) உறுதிப்படுத்தும் மிக முக்கிய சான்றாக விளங்குகிறது.
மன்னராட்சி முதல் குடியாட்சி (மக்களாட்சி) வரை வரி வசூலிப்பு முறை என்பது அரச நிர்வாகத்தின் அடிப்படை அங்கமாகத் தொடர்ந்து வருகிறது. பெயர்கள் மாறினாலும், வரிவிதிப்பின் முக்கிய நோக்கம் அரசின் செயல்பாட்டிற்கான நிதியைத் திரட்டுவது மற்றும் பொதுச் சேவைகளை வழங்குவதாகும்.
கிஸ்தி இன்று நவீன காலத்தில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் கிராமப்புறங்களில் இன்றும் கிராம நிர்வாக அலுவலர் (VAO) மூலம் ‘தீர்வை’ (Land Revenue) அல்லது ‘பட்டா வரி’ என்ற பெயரில் வசூலிக்கப்படுகிறது. பட்டாவில் உள்ள ‘வரி விவரம்’ (Tax Details) என்பதே கிஸ்தியின் தொடர்ச்சியாகும். அதுபோல் நகர்ப்புறங்களில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் இது நகரப்புறங்களில் (Urban Areas), நகரங்களில் Property Tax (சொத்து வரி), Corporation / Municipality Tax, House Tax / Vacant Land Taxஎன்ற பெயர்களில் வசூலிக்கப்படுகிறது. இவைகள் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகள் மூலம் வசூலிக்கப்படுகிறது.
அதுபோல் ஒரு நிலத்திற்கான பட்டா என்பது ஒரு வருவாய் பதிவு மட்டுமே, அது முழுமையான உரிமைச் சான்று அல்ல என்று சுட்டிக்காட்டிய அவர், வரி செலுத்த வேண்டியதின் முக்கியத்துவத்தை பற்றியும், ஒருவேளை வரி செலுத்தாமல் போனால் எதிர்காலத்தில் ஏற்படும் சிக்கல்களையும் மற்றும் நில உரிமையாளர்கள் தங்கள் சொத்துக்களைப் பாதுகாக்கப் பின்வரும் நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கிராம நிலங்களுக்கு ‘தீர்வை’ மற்றும் நகர நிலங்களுக்கு ‘சொத்து வரி’யைத் தவறாமல் செலுத்த வேண்டும். பட்டாவில் வரிப் பதிவு (Tax Entry) சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். வரி செலுத்திய அசல் ரசீதுகளைப் பத்திரமாகப் பராமரிக்க வேண்டும். பெயர் மாற்றம் (Mutation) செய்தவுடன், வரிப் பதிவேடுகளிலும் பெயர் மாற்றம் அடைந்துள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
சரியான நேரத்தில் வரி செலுத்தி பெறப்படும் நில வரி ரசீது, அந்த நிலத்தின் மீது உங்களுக்கு உள்ள சட்டப்பூர்வ உரிமையை நிரூபிக்கும் ஒரு ஆவணமாகும். இது வருவாய் பதிவேடுகளில் (Patta/Chitta) உங்கள் பெயரைத் தொடர்ந்து வைத்திருக்க உதவுகிறது. பட்டா இருந்தாலும், வரி கட்டிய ரசீது இல்லையென்றால் நிலப் பரிமாற்றங்கள், விற்பனை அல்லது சட்டப் பூர்வமான வாரிசுரிமை மாற்றங்களின்போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கிறது.
வரி கட்டாமல் விடப்படும் நிலங்கள் காலப்போக்கில் “அனாதீனம்” என வகைப்படுத்தப்பட்டு, அரசு நிலமாக மாற்றப்பட சட்டத்தில் இடமுண்டு. எனவே வரி செலுத்தாத நிலங்களை அரசு கையகப்படுத்துவதற்குச் சட்டப்படி உரிமை உள்ளது. ஆகவே முறையாக வரி செலுத்தி வருவதன் மூலம் நிலம் பறிமுதல் செய்யப்படுவதிலிருந்து பாதுகாக்கிறது.
நில வரி மூலம் உள்ளூர் அரசாங்கங்களுக்கு (பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி) கிடைக்கும் வருவாயை கொண்டு அப்பகுதியில் சாலைகள், தெருவிளக்குகள், சுகாதாரம், பூங்காக்கள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தப் பயன்படுகிறது. முறையாக வரி செலுத்துவது, நிலத்தின் மீதான நிதி நம்பகத்தன்மையை அதிகரித்து வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் நிலத்தின் மீது கடன்கள் (Loan against property) பெறுவதை எளிதாக்குகிறது. அதேசமயம் வரி செலுத்துவதில் ஏற்படும் தாமதங்கள் அல்லது வரி ஏய்ப்பு, அபராதம் மற்றும் வட்டி போன்ற கூடுதல் நிதி இழப்புகளுக்கு வழிவகுக்கும்.
கட்டபொம்மன் அன்று வரி கொடுக்க மறுத்தது சுதந்திரத்திற்காக. ஆனால் இன்று நீங்கள் வரி செலுத்தத் தவறுவது உங்கள் நிலத்தின் சுதந்திரத்தை நீங்களே இழப்பதற்குச் சமம். ஆகவே பொதுமக்கள் தங்களது நிலத்திற்கான வரியை முறையாக செலுத்திட வேண்டும் எனவும், நிலத்தை வாங்குவது முதலீடு… வரி செலுத்துவது பாதுகாப்பு!” என்ற தாரக மந்திரத்தை பொதுமக்கள் உணர்ந்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என டாக்டர்.ஆ.ஹென்றி தனது செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.

