மகள் சாவில் மர்மம் பெற்றோர் போலீசில் புகார்
![]()
திருவள்ளூர் அருகே இளம் பெண் தற்கொலை : மகள் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார்: திருமணமாகி இரண்டரை ஆண்டுகளே ஆனதால் ஆர்டிஓ விசாரணை :
திருவள்ளூர் ஏப் 28 : திருவள்ளூர் அடுத்த பூண்டி ஜெயராம் தெருவை சேர்ந்த ரமேஷ் மகன் ஆகாஷ்(26) என்பவர் புல்லரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கீதா என்பவரின் மகள் மோனிகா (25) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். பூண்டியில் அரசு பள்ளியில் படிக்கும் போது காதலித்து பெண்ணின் பெற்றோருக்கு சொல்லாமல் ஓடிப் போய் திருமணம் செய்து உள்ளனர். ஆகாஷ் திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ குமரன் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். திருமணம் நடந்து சுமார் இரண்டு ஆண்டுகள் மோனிகா தந்தை உடல்நிலை குறைவால் இறந்து போனதால் தாயிடம் பேசாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தாய் கீதாவிடம் மோனிகா பேசியுள்ளார். அப்போது கர்ப்பமாக இருப்பதாகவும், மாமனார் குடிபோதையில் திருமணத்தின் போது என்ன நகை போட்டு வந்தாய்? என்ன சீர் கொண்டு வந்தாய்? என கேட்டு தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.இதனால் தாய் கீதா, கண்டிப்பாக ஏதாவது செய்கிறேன் என சமாதானம் சொல்லியுள்ளார். இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு மாமனார், கணவர், மாமியார் ஆகியோர் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாக செல்போனில் பேசும்போது தெரிவித்துள்ளார். இந்நிலையில் செல்போனில் பேசிய மறுநாளில் இருந்து மகளின் செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ள முடியாதவாறு செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை மோனிகாவின் தாய் கீதாவிடம் ஆகாஷின் உறவினர்கள் வந்து, உங்கள் மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த மோனிகாவின் தாய் கீதா மற்றும் சகோதரர்கள் விரைந்து வந்து பார்த்தபோது மகளின் கணவர் ஆகாஷ், அவரது தந்தை ரமேஷ் மற்றும் தாய் சுமித்ரா மற்றும் அவர்களது உறவினர்கள் வீட்டில் இருந்துள்ளனர்.மகளின் மரணம் குறித்து கேட்டதற்கு, தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் இரவு நேரத்தில் புழுக்கம் காரணமாக வீட்டிற்கு ஏ.சி வாங்கி தருமாறு மோனிகா கேட்டார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை இருந்து வந்தது.நேற்று இரவு ஆகாஷ் மற்றும் அவரது தம்பி அவினாஷ், அப்பா ரமேஷ் மற்றும் அம்மா சுமித்ரா ஆகிய நான்கு பேரும் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கச் சென்றோம்.
காலையில் ஆகாஷ் எழுந்து வந்து பார்த்த போது படுக்கை அறையில் தனியாக இருந்த மனைவி மோனிகா புடவையால் மின்விசிறியில் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளனர். இதனால் மோனிகாவின் பிரேதத்தை கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் பெற்றோருக்கு தெரிவிக்காமல் வீட்டை விட்டு ஓடி காதல் திருமணம் செய்து கொண்ட மகள் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கணவர் வீட்டார் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாக தெரிவித்த நிலையில் மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறுவதும், ஏ.சி. கேட்டு வாங்கி தராததால் இது போன்ற முடிவை எடுத்ததாக கூறுவதை ஏற்க முடியவில்லை என்றும் மகள் சாவில் மர்மம் இருப்பதால் கணவர் ஆகாஷ், மாமனார் ரமேஷ், மாமியார் சுமித்ரா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புல்லரம்பாக்கம் போலீசில் மோனிகாவின் தாய் கீதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.திருமணம் ஆகி இரண்டரை ஆண்டுகள் மட்டுமே ஆனதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.மகளின் உடலை கணவர் வீட்டில் ஒப்படைக்க போவதில்லை என்றும் நாங்களே உடலை அடக்கம் செய்ய போவதாகவும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

