ஒரு சின்ன கையெழுத்து உங்கள் சொத்தை பறிக்கலாம்
![]()
முச்சலிக்கா” (Muchalika) ஒரு சின்ன கையெழுத்து உங்கள் சொத்தை பறிக்கலாம்! டாக்டர் ஹென்றி அதிரடி எச்சரிக்கை
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஹென்றி அவர்கள் ஒரு சின்ன கையெழுத்து உங்கள் வாழ்நாள் சொத்தையே கேள்விக்குறியாக்கலாம்!” – தமிழகத்தில் நிலம் தொடர்பான விவரங்களில் அதிகம் புழங்கும் ‘முச்சலிக்கா’ குறித்த அதிர வைக்கும் உண்மைகளை பகிர்ந்து வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில்..
“முச்சலிக்கா” இந்த வார்த்தை முச்சல்கா (Muchalka ) என்ற ஹிந்தி வார்த்தையிலிருந்து தமிழில் வழக்கில் வந்துள்ளது எனவும், இது பெரும்பாலும் ‘முச்சல்கா பத்ர’ (Muchalka Patra) எனவும் அழைக்கப்படுகிறது, “முச்சலிக்கா” என்பது பொதுவாக நில சாகுபடி, வாடகை அல்லது சட்ட ரீதியான உடன்படிக்கைகளுக்காக நிலத்தின் சொந்தக்காரருக்கு அல்லது அதிகாரிகளுக்கு ஒருவரால் மற்றொருவரிடம் வழங்கப்படும் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தப் பத்திரம் அல்லது பிணையப் பத்திரம் ஆகும். இது பெரும்பாலும் வருவாய்த் துறை மற்றும் நிலம் தொடர்பான விவகாரங்களில், குறிப்பிட்ட ஒரு நிபந்தனை குறித்து எவ்வித எதிர்ப்பும் இல்லை அல்லது குறிப்பிட்ட நிபந்தனைகளை ஏற்கிறோம் என்ற வகையில் வழங்கப்படுகிறது.
நடைமுறையில், முச்சலிக்கா பல சூழ்நிலைகளில் பெறப்படுகிறது. குறிப்பாக நில அளவீடு, பட்டா மாற்றம், உட்பிரிவு (Subdivision), வழித்தட உரிமை, எல்லைத் தகராறு தீர்வு போன்ற செயல்பாடுகளில், சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து முச்சலிக்கா பெறப்படுவது வழக்கம். இது சம்பந்தப்பட்ட நிலத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் போது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஒரு ஆதார ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது.
இதில் பொதுமக்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கிய அம்சம் என்னவென்றால், முச்சலிக்கா என்பது ஒரு பதிவு செய்யப்பட்ட பத்திரம் (Registered Document) அல்ல. இது ஒரு சட்டப்பூர்வ உறுதிமொழி என்றாலும், உரிமையை (Title) மாற்றும் ஆவணம் அல்ல. எனவே, முச்சலிக்காவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நில உரிமை மாற்றம் நடந்ததாக கருதுவது தவறானது.
ஆகவே நாம் ஒருவருக்கு முச்சலிக்கா வழங்கும் போது அதன் விளைவுகளை முழுமையாக புரிந்து கொள்ளாமல் கையெழுத்திடுவது மிகவும் ஆபத்தானது. ஒருமுறை கையெழுத்திட்ட பிறகு, அதனை எதிர்த்து பின்னர் வாதிடுவது என்பது மிக கடினமானதாக மாறக்கூடும்.
முக்கியமாக நிலம் வாங்கும் போது முச்சலிக்கா மட்டும் போதுமான ஆவணம் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பாக, நான் முழு மனதுடன் சம்மதிக்கிறேன் (“எனக்கு எதிர்ப்பு இல்லை”) அல்லது உரிமை கோர மாட்டேன் (“எனக்கு உரிமை இல்லை”) போன்ற உள்ளடக்கங்களைக் கொண்ட முச்சலிக்கா, எதிர்காலத்தில் உங்கள் உரிமையை பாதிக்கக்கூடும். எனவே, பொதுமக்கள் முச்சலிக்கா கையெழுத்திடும் முன் அதன் உள்ளடக்கத்தை முழுமையாக வாசித்து புரிந்து கொள்ள வேண்டும். அது எந்த நோக்கத்திற்காக பெறப்படுகிறது என்பதனை தெளிவாக அறிய வேண்டும் மற்றும் இதனால் எதிர்காலத்தில் ஏற்படும் சட்ட சிக்கல்களை கவனத்தில் கொண்டும், தேவையானால் சட்ட நிபுணர்களின் ஆலோசனை பெற வேண்டும். மேலும் நிலம் வாங்கும் போது சம்பந்தப்பட்ட நிலத்தின் பட்டா, சிட்டா, பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரம் (Sale Deed), EC போன்ற அனைத்து சட்ட ஆவணங்களையும் சரிபார்த்த பின்னரே வாங்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
ஆகவே பொதுமக்கள் தங்களது சொத்து உரிமையை பாதுகாப்பது அவர்களது பொறுப்பு எனவும் விழிப்புணர்வுடன் செயல்படுவது மட்டுமே எதிர்கால சட்ட சிக்கல்களை தவிர்க்க உதவுமெனவும் டாக்டர் ஹென்றி தெரிவித்துள்ளார்.

