திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடி செயலாளரிடம் மனு

Loading

புதுச்சேரி நவ-13
புதுச்சேரி உப்பளம் தொகுதி திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடி தலைமை செயலகத்தில் வருவாய் துறை செயலாளரிடம் மனு
புதுச்சேரி உப்பளம் தொகுதி திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடி தலைமை செயலகத்தில் வருவாய் துறை செயலாளர் கிருஷ்ண மோகன் அவர்களிடம் அளித்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது, பாண்டிச்சேரி வருவாய் கிராமம், துப்ராயப்பேட்டை குக்கிராமத்தின் வார்டு E, தொகுதி 6, T.S எண் 39 & 20 ஆகிய பகுதிகளில் உள்ள அரசு நிலங்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டியல் சாதி மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி தொழுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் முன்பு ஓலைக் குடிசைகளில் வாழ்ந்து வந்த நிலையில், CERTH INDIA ORGANIZATION என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் சில நன்கொடையாளர்கள் இணைந்து, சுமார் 16 குடும்பங்களுக்கு RCC குடியிருப்புகளை கட்டியளித்திருந்தனர். தற்போது, இக்குடியிருப்புகளின் கூரைகள் மற்றும் கட்டிடங்கள் மிகவும் பாழடைந்து, குடியிருப்பது ஆபத்தான நிலைக்கு மாறியுள்ளதால், அந்த நிறுவனம் நிதி இல்லாமையின் காரணமாக பழுது பார்க்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
இதனால், இக்குடியிருப்புகளில் வசிக்கும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு அரசு சார்ந்த எந்த ஆதரவும் இல்லாத நிலையிலுள்ளனர். இவர்களின் வறுமை நிலையும், சமூக பின்னணியும் கருத்தில் கொண்டு, அவர்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் அரசு நிலங்களில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இதே பகுதியில் வசித்து வரும் மற்ற குடியிருப்பாளர்களுக்கு ஏற்கனவே 15–20 ஆண்டுகளுக்கு முன் இலவச மனைப் பட்டா வழங்கப்பட்டிருப்பதையும், அப்போது இந்த தொழுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அரசு சாரா அமைப்பின் ஆதரவுடன் வசித்ததால் புறக்கணிக்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை வருவாய்த் துறை செயலாளர் அவர்கள் கவனத்தில் கொண்டு, நில மானிய விதிகளின் கீழ் தகுதியுடைய ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு திமுக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் கேட்டுக்கொண்டார். சந்திப்பின் பொழுது தொகுதி செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர் ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
0Shares