கிராம நிர்வாக அலுவலகம் முன்பு தீக்குளித்த பெண் உயிரிழப்பு.. விசாரணையில் பரபரப்பு தகவல்!
மதுரை அருகே கிராம நிர்வாக அலுவலகம் முன்பு தீக்குளித்த பெண் தலையாரி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கெஞ்சம்பட்டியை சேர்ந்த சங்கிலி முருகன் குன்னத்தூரில் கிராம தலையாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சோனியா டி.கல்லுப்பட்டி அருகே உள்ள செங்குளத்தில் தலையாரியாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
குடும்ப தகராறு காரணமாக கணவன் சங்கிலி முருகன் வீட்டுக்கு செல்லாமல், தனது தங்கையின் வீட்டுக்கு சென்று விட்டாராம். இதையடுத்து கணவரை வீட்டுக்கு வருமாறு சோனியா அழைத்துள்ளார். ஆனால் அதற்கு சங்கிலி முருகன் மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 19-ந் தேதி சோனியா டி.குன்னத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று கணவர் சங்கிலி முருகனை தன்னுடன் வீட்டுக்கு வருமாறு மீண்டும் அழைத்து உள்ளார். அப்போதும் அவர் மறுத்துவிட்டதாக சொல்லபடுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சோனியா, தான் கொண்டு வந்த பெட்ரோைல தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக சோனியாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். ஆனால் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.