பிரதீபா பாலியல் வன்கொடுமை நீதி வென்றுள்ளது

Loading

நீதி வென்றுள்ளது… இனி தடுப்பு நடவடிக்கைகளே நாட்டின் முன்னுரிமையாக அமைய வேண்டும்!” – டாக்டர் ஆ. ஹென்றி.

 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பிரதீபா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள இரட்டை ஆயுள் மற்றும் இரட்டை தூக்குத் தண்டனை தீர்ப்பினை அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை (AIJMNP) பெரிதும் வரவேற்பதுடன், சட்டத்தின் மீது மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாகவும் கருதுகிறது என்று அதன் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“ஒரு குழந்தையின் உயிரை எந்தத் தண்டனையும் திரும்பக் கொண்டு வர முடியாது. ஆனால் குற்றத்திற்கு எதிராக சட்டம் தலைகுனியாது என்பதை சமூகத்திற்கு உணர்த்துவது நீதியின் கடமை. இன்று வழங்கப்பட்டுள்ள இச்சிறப்பு மிகு தீர்ப்பு, பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கண்ணீருக்கு முழுமையான ஈடு அல்ல; ஆனால் குற்றவாளி சட்டத்தின் முன் தப்பிக்க முடியாது என்ற வலுவான செய்தியாக அமைந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம், வீட்டில் கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் இயற்கை உபாதையை கழிக்க வெளிப்புறம் சென்ற பள்ளி மாணவி பிரதீபா மீது நிகழ்ந்த மனிதத்தன்மையற்ற தாக்குதல் தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் மனித மனங்களை உலுக்கியது.

அந்த வேதனையான தருணத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு விரைவான நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், பெண்கள் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்யும் நீண்டகால தீர்வுகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் எங்களது பேரவை சார்பில் குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக ஆளுநரிடம் அவசரக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இன்று வெறும் 76 நாட்களிலேயே நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, விரைவான நீதியின் அவசியத்தை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது. வழக்கை அறிவியல் ஆதாரங்களுடனும், சட்டநெறிகளுடனும் துல்லியமாக விசாரித்து நீதியை நிலைநாட்டிய மாண்புமிகு நீதிபதி அவர்களுக்கும், காவல்துறை, வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறை அமைப்பினருக்கும் எங்களது பேரவையின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆனால், ஒவ்வொரு குற்றத்திற்குப் பிறகும் தண்டனை வழங்குவது மட்டும் போதுமானதல்ல.

குற்றம் நடக்காத சமூகத்தை உருவாக்குவதே அரசின் உயர்ந்த கடமையாக இருக்க வேண்டும்.

எனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:

* நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் ‘தன்னிறைவு பெற்ற பாதுகாப்பான கழிவறை’ வசதி 100% உறுதி செய்யப்பட வேண்டும்.

* கிராமப்புறங்கள், நகர்ப்புற ஏழை மக்கள் குடியிருப்புகள், பழங்குடியினர் பகுதிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.

* பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை, அரசு அலுவலகம், பேருந்து நிலையம், சந்தைகள் உள்ளிட்ட அனைத்து பொதுமக்கள் பயன்பாட்டு இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பான கழிவறைகள் மற்றும் கண்காணிப்பு வசதிகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

* வேலைக்குச் செல்லும் பெண்கள், மாணவிகள், குழந்தைகள், தாய்மார்கள், முதிய பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பு மையப்படுத்திய பொது கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும்.

* பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில் முன்கூட்டிய கண்காணிப்பு அமைப்புகள், விரைவு நீதிமன்றங்கள், மனநல மதிப்பீடு மற்றும் சமூக விழிப்புணர்வு திட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்.

* ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்களில் தேவையான திருத்தங்கள் செய்து, குற்றம் நடைபெறுவதற்கு முன்பே தடுக்கும் முன்னெச்சரிக்கை சட்ட அமைப்புகள் கொண்டு வரப்பட வேண்டும்.

* பெண்கள் பாதுகாப்பு குறித்த மாவட்ட வாரியான செயல்திட்டம் மற்றும் காலக்கெடு அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

இன்றைய தீர்ப்பு ஒரு வழக்கின் முடிவு அல்ல — இனி எந்த பெண் குழந்தையும், எந்தத் தாயும், எந்த மாணவியும் பாதுகாப்பின்றி வாழ வேண்டிய அவல நிலை மீண்டும் ஏற்படக் கூடாது என்பதற்கான சமூகத்தின் கூட்டு உறுதிமொழியாக அமைய வேண்டும்.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை நினைத்துப் பார்க்கும் ஒவ்வொருவரின் மனதிலும் சட்டத்தின் மீதான அச்சத்தையும், சமூகத்தின் மீது பொறுப்புணர்வையும் ஏற்படுத்தும் வரலாற்றுச் சின்னமாக அமையட்டும் என டாக்டர் ஆ. ஹென்றி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

0Shares