50முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்-ஹென்றி
![]()
நகர் ஊரமைப்பு இயக்குனரகத்தில் நடைபெற்ற ஸ்டேக் ஹோல்டர்கள் கருத்துக்கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் அரசின் கவனத்திற்கு 50-க்கும் மேற்பட்ட முக்கியகொள்கைக் கோரிக்கைகளை முன்வைத்தார் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர்மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி
நகர் ஊரமைப்பு இயக்குனரகம் (DTCP) சார்பில் இன்று நடைபெற்ற ஸ்டேக் ஹோல்டர்கள் கருத்துக் கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி அவர்கள் நேரில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டின் நகர்ப்புற மற்றும் ஊரக வளர்ச்சியை விரைவுபடுத்தவும், திட்ட அனுமதி நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், பொதுமக்கள், நில உரிமையாளர்கள், அபிவிருத்தியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் நீண்டகால நடைமுறைச் சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு காணவும், அரசின் கவனத்திற்கு 50-க்கும் மேற்பட்ட முக்கிய கொள்கைக் கோரிக்கைகள் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தப் பரிந்துரைகளை வலியுறுத்தி முன்வைத்தார்.
டாக்டர் ஹென்றி அவர்கள் முன்வைத்த இந்தப் பரிந்துரைகள், திட்ட அனுமதி நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், தேவையற்ற நிர்வாகத் தாமதங்களை நீக்குதல், மாவட்ட அளவிலேயே அதிகாரப் பகிர்வை அதிகரித்தல், பொதுமக்களின் செலவு மற்றும் கால விரயத்தை குறைத்தல், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஒருங்கிணைந்த அனுமதி முறைமையை உருவாக்குதல், நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளுக்கு சமமான வளர்ச்சி வாய்ப்புகளை வழங்குதல், முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் உலகத் தரத்திற்கு இணையான வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்குதல் ஆகிய உயரிய நோக்கங்களை மையமாகக் கொண்டதாகும்.
டாக்டர் ஹென்றி அவர்கள் அரசின் கவனத்திற்கு முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு:
திட்ட அனுமதி வழங்கும் போது தேவையற்ற வகையில் திரும்பத் திரும்ப ஆவணங்கள் கோரும் நடைமுறையை முழுமையாகக் குறைத்து, ஒரே முறை ஆவணச் சரிபார்ப்பின் அடிப்படையில் விரைவான அனுமதி வழங்க வேண்டும்.
அனைத்து துறைகளின் தடையின்மைச் சான்றுகளையும் ஒருங்கிணைந்த நிர்வாக அமைப்பின் மூலம் அரசு தானாகவே பெற்று, விண்ணப்பதாரர்களின் சுமையை குறைக்கும் நடைமுறையை உருவாக்க வேண்டும்.
திட்டமில்லா பகுதிகளில் உள்ள நஞ்சை நிலங்களுக்கு, தற்போது நடைமுறையில் உள்ள மாவட்ட ஆட்சியரின் தடையின்மைச் சான்று பெறும் முறையை மாற்றி அமைத்து, DTCP ஆணையர் நிலையிலேயே வருவாய்த் துறை பதிவேடுகளின் அடிப்படையில் விரைவாக முடிவெடுக்கும் நடைமுறையை உருவாக்க வேண்டும்.
திட்டமில்லா பகுதிகளில் உள்ள புஞ்சை நிலங்களுக்கு, வேளாண் துறையின் இணை இயக்குநரின் தடையின்மைச் சான்று பெறும் நடைமுறைக்கு விலக்கு அளித்து, கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் மற்றும் வருவாய்த் துறை பதிவுகளின் அடிப்படையில் மாவட்ட DTCP இணை/துணை/உதவி இயக்குனர் அளவிலேயே முடிவெடுக்க அதிகாரம் வழங்க வேண்டும்.
முழுமைத் திட்டங்களில் (Master Plan) நிலங்களை அதன் பயன்பாடு குறித்து வகைப்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை சரிசெய்து, மீண்டும் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்று, எதிர்கால வளர்ச்சியை முன்னறிவிக்கும் வகையில் அறிவியல் மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் புதிய முழுமைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் வரன்முறை சட்டத்தின் கீழ் அனுமதி பெற்றுள்ள சாலைகளின் வழியாகவும், மேலும் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் பூர்வீக சாலைகளில் குறைந்தபட்சம் 6 மீட்டர் அணுகுச் சாலை இருந்தால், அப்பகுதிகளில் ரியல் எஸ்டேட் திட்டங்களை அனுமதிக்க வேண்டும்.
எதிர்கால சாலை விரிவாக்கம், திட்டச் சாலைகள், உயர் மின் கோபுரங்கள் உள்ளிட்ட அரசுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிலங்களை இலவசமாக அரசுக்கு ஒப்படைக்க வற்புறுத்துவதற்குப் பதிலாக, அதற்குச் சமமான Transferable Development Rights (TDR) அல்லது Owner’s Use/Open Space போன்ற மாற்று உரிமைகளை வழங்க வேண்டும்.
கடலோர பாதுகாப்பு மண்டல (CRZ) பகுதிகளில் 2019 அறிவிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு, நடைமுறையில் உள்ள விதிகளுக்கு இணங்க அனுமதி வழங்கும் வழிமுறையை ஏற்படுத்த வேண்டும். மேலும், அத்தகைய கட்டிடங்களில் இரண்டாம் மற்றும் மூன்றாம் தள கட்டுமானங்களுக்கும் உரிய அனுமதி வழங்க வேண்டும்.
தொடர் கட்டுமான பகுதி (Continuous Building Area) அனுமதிக்கான வரம்பை மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளை கண்டறிந்து விரைவாகவும் கணிசமாகவும் உயர்த்த வேண்டும்.
அனுமதியற்ற முறையிலும் உள்ளாட்சி அனுமதி என்கிற பெயரிலும் விதி மீறி கட்டப்பட்டுள்ள பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு, திட்டப் பகுதிகள் மற்றும் திட்டமில்லா பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியான அனுமதி நடைமுறையை உருவாக்க வேண்டும்.
ஒரு ஹெக்டேர் வரையிலான திட்டங்களுக்கு OSR விலக்கு வழங்கப்பட்டு அதற்குப் பதிலாக கட்டணம் வசூலிக்கும் நடைமுறை தற்போது உள்ளது. அதேபோல், CMDA பகுதிகளில் நடைமுறையில் உள்ள 3,000 சதுர மீட்டர் வரையிலான OSR விலக்கு சலுகையை DTCP பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தி, அனைத்து நில உரிமையாளர்கள் மற்றும் அபிவிருத்தியாளர்களும் சமமாகப் பயன்பெறும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு விதிமீறி கட்டப்பட்ட பழைய கட்டிடங்கள் தொடர்பாக, பொதுநல வழக்கு என்ற பெயரில் சமூக ஆர்வலர்களால் வழக்குகள் தொடர்ந்து இடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதைத் தவிர்க்க, அதற்கான காலவரம்பை நிர்ணயித்து உரிய சட்டச் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும்.
Master Plan தயாரிப்பு குழுக்களில் ரியல் எஸ்டேட், நகர திட்டமிடல் மற்றும் தொழில்நுட்ப அனுபவம் கொண்ட வல்லுநர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.
DTCP தலைமை அலுவலகத்தில் அரசாணைகள், சுற்றறிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப நடைமுறைகள் குறித்து உடனடி வழிகாட்டுதல் வழங்கும் நிரந்தர உதவி மையம் அமைக்க வேண்டும்.
அனுமதியின்றி அல்லது விதிமீறி கட்டப்பட்டுள்ள அனைத்து வகையான கட்டிடங்களையும், சட்டரீதியான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு வரன்முறைப்படுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
மாவட்ட அளவிலான DTCP அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி வழங்கும் அதிகார வரம்புகளை உயர்த்தி, கோப்புகள் தலைமை அலுவலகத்திற்குச் செல்லும் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.
திறந்தவெளி நிலம் (OSR) கணக்கீட்டு முறையில், நகரங்கள், கிராமங்கள், திட்டப் பகுதிகள் மற்றும் திட்டமில்லா பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைத்து நில உரிமையாளர்களுக்கும் பாரபட்சமின்றி ஒரே மாதிரியான சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.
சென்னை புறநகர் பகுதிகளில், வரன்முறைச் சட்டத்தின் கீழ் அனுமதி பெற்றதாகக் கூறி, நஞ்சை நிலங்களுக்கு உட்பிரிவு அனுமதி பெற்று சட்டவிரோதமாக போலி அனுமதிகள் பெறப்படும் நடைமுறையைத் தடுக்க DTCP உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து உட்பிரிவு (Subdivision) அனுமதிகளும் முழுமையாக இணையவழியில் மட்டுமே விரைவாக வழங்கப்பட வேண்டும்.
உள்ளாட்சிகள் 30 நாட்களுக்குள் இறுதி ஒப்புதல் வழங்கத் தவறினால், Deemed Approval / Automatic Approval நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.
Self Certification முறையின் வரம்புகளை உயர்த்தி, அதிகமான குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டிடங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும்.
மாநிலம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட பொறியாளர்கள் DTCP, CMDA, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரக உள்ளாட்சி உள்ளிட்ட அனைத்து அமைப்புகளிலும் தனித்தனி பதிவு இன்றி மேற்கண்ட அமைப்புகளில் எங்கு பதிவு செய்தாலும் ஒரே பதிவின் கீழ் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
18.30 மீட்டர் உயரம் வரை உள்ள குடியிருப்பு, வணிக மற்றும் பொது பயன்பாட்டு கட்டிடங்களுக்கு ஒரே மாதிரியான Setback விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும்.
Completion Certificate வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்தி, வெளிப்புற அளவுகள் விதிகளுக்கு ஏற்ப இருந்தால் உள்புற மாற்றங்களை காரணமாகக் கொண்டு சான்றிதழ் மறுப்பதை தவிர்க்க வேண்டும்.மேல்முறையீட்டு மனுக்களை முழுமையாக இணையவழியில் தாக்கல் செய்யும் வசதி ஏற்படுத்த வேண்டும்.
Self Certification-க்கான மாதிரி வரைபடங்கள் (Model Drawings) இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
ஆவணக் குறைபாடுகள் மற்றும் ஆய்வு தொடர்பான தகவல்களை மின்னஞ்சல் மூலம் உடனுக்குடன் தெரிவிக்கும் நடைமுறையை உருவாக்க வேண்டும்.
Single Window Portal-ல் QR Code, User ID, Password, Debit Card, Credit Card உள்ளிட்ட பல்வேறு முறைகளின் மூலம், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரே எளிதாக திட்ட அனுமதி கட்டணங்களை நேரடியாகச் செலுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
Self Certification வரைபடங்களில் ஏற்படும் தவறுகளை விண்ணப்பத்தை நிராகரிக்காமல் திருத்திக்கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும்.
ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடங்களில் கூடுதல் கட்டுமானம் மேற்கொள்ளும்போது, புதியதாக கட்டப்படும் பகுதியின் பரப்பளவிற்கு மட்டுமே திட்ட அனுமதி கட்டணம் வசூலிக்க வேண்டும்.
வரன்முறை செய்யப்பட்ட வீட்டுமனைப் பிரிவுகளில் தேவையான நிபந்தனைகளுடன் வணிகப் பயன்பாட்டையும் அனுமதிக்க வேண்டும்.
பழைய கட்டிடங்களை இடிக்கும் (Demolition) அனுமதியையும் Self Certification அடிப்படையில் வழங்க வேண்டும்.
அனுமதியற்ற மனைகளை வரன்முறை செய்யும் திட்டத்தின் கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும்.
அனுமதியற்ற மனை பிரிவு திட்டங்களுக்கு அருகில் சுடுகாடு, ஆறு, குளம், ஏரி, குவாரி போன்றவை உள்ளன என்ற ஒரே காரணத்தால் மனை வரன்முறை விண்ணப்பங்களை நிராகரிக்கும் நடைமுறையை மறுபரிசீலனை செய்து, ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாக ஆய்வு செய்து முடிவு செய்ய வேண்டும்.
DTCP சட்டங்கள், அரசாணைகள், சுற்றறிக்கைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கக் காணொளிகளை வெளியிட வேண்டும்.
Diploma Engineers மற்றும் Structural Engineers ஆகியோரின் தொழில்முறை பங்களிப்பை உரிய அளவில் அங்கீகரித்து அவர்களின் அதிகார வரம்புகளை தெளிவுபடுத்த வேண்டும்.
Commercial Building அனுமதியில் ஆன்லைன் நடைமுறைகளுக்கும் உள்ளாட்சி விதிகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும்.
புதிய கொள்கைகள் மற்றும் அரசாணைகள் அனைத்தும் Single Window Portal-ல் உடனுக்குடன் வெளியிடப்பட வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ஒருங்கிணைந்த அனுமதி முறைமையை உருவாக்கி, அனைத்து துறைகளின் தரவுகளையும் தானாக ஒருங்கிணைத்து, மனித தலையீட்டை குறைத்து, “ஒரே நாடு – ஒரே நிலம் – ஒரே அனுமதி” என்ற கொள்கை நோக்கில் உலகத் தரத்திற்கு இணையான திட்ட அனுமதி அமைப்பை உருவாக்க வேண்டும்.
கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட அனைத்து பரிந்துரைகளையும் நகர் ஊரமைப்பு இயக்குனரக ஆணையர் திரு. கிரண் குராலா, இ.ஆ.ப. அவர்கள் கனிவுடன் கேட்டறிந்து, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, நடைமுறைக்கு உகந்த பரிந்துரைகளை விரைவாக அமல்படுத்தவும், தேவையான இடங்களில் பிற துறைகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையை தெரிவித்தார்.
இதற்காக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) சார்பில் ஆணையர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
“விரைவான அனுமதி – வெளிப்படையான நிர்வாகம் – முதலீட்டிற்கு உகந்த சூழல் – பொதுமக்களுக்கு எளிய சேவை” என்ற உயரிய நோக்கில், தமிழ்நாட்டின் நகர்ப்புற மற்றும் ஊரக வளர்ச்சிக்காக அரசுடன் இணைந்து தொடர்ந்து ஆக்கப்பூர்வமான கொள்கைப் பரிந்துரைகளை வழங்கும் பணியை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தொடரும்.

