விஞ்ஞானி பொன்ராஜ் மீது அரசியல் பழிவாங்கும்நடவடிக்கை
![]()
விஞ்ஞானி பொன்ராஜ் அவர்கள் மீது அரசியல் பழிவாங்கும்நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் – இளைஞர்களை நல்வழிப்படுத்தியவரை குற்றவாளியாக சித்தரிப்பதுதமிழ்நாட்டிற்கு அவமானம்”தமிழக முதலமைச்சருக்கு அகில இந்திய ஜனநாயக மக்கள்நலப் பேரவை வலியுறுத்தல்
அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி அவர்கள், மரியாதைக்குரிய விஞ்ஞானி திரு.பொன்ராஜ் அவர்கள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மிக முக்கியமான மற்றும் உணர்வுபூர்வமான கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கோரிக்கை மனுவில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், மகத்தான விஞ்ஞானி, தமிழரின் பெருமை, உலக இளைஞர்களின் கனவுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் மிக நெருங்கிய அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்புத்துறையில் நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய உயரிய விஞ்ஞானியாகவும் விளங்கிய திரு. பொன்ராஜ் அவர்கள், இளைஞர்கள் ஒழுக்கநெறியுடனும் சமூக பொறுப்புணர்வுடனும் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவரது பேச்சுக்கள் சமூக ஊடகங்களில் திட்டமிட்டு திரித்து சித்தரிக்கப்பட்டு பெரும் சர்ச்சையாக மாற்றப்பட்டுள்ளதாக வேதனையுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், திரைப்பட உலகில் உச்ச நட்சத்திரமாக இருந்து அரசியல் தளத்தில் புதிய மாற்றத்தை உருவாக்கிய தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் மீது சில பெண்கள் மற்றும் ரசிகைகள் பொதுவெளியில் தெரிவித்த கருத்துக்கள் சமூகத்தில் பெரும் அதிருப்தியையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியதாகவும், “நாங்கள் எங்கள் தலைவருக்கு அக்காவாகவும், தங்கையாகவும், வேண்டுமென்றால் மனைவியாகவும் இருப்போம்” போன்ற கருத்துக்கள் இளைஞர்களின் மனநிலையையும் சமூக ஒழுக்கத்தையும் பாதிக்கக்கூடியவையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் என்பது இளைஞர்களை நல்வழிப்படுத்தும் உயரிய இயக்கமாக இருக்க வேண்டுமே அன்றி உணர்ச்சி வசப்பட்ட தவறான அடையாள அரசியலை உருவாக்கும் தளமாக மாறக்கூடாது என்றும், சமூகத்தில் பெண்களின் கண்ணியமும் இளைஞர்களின் ஒழுக்கநெறியும் பாதுகாக்கப்பட வேண்டியது ஒவ்வொரு அரசியல் இயக்கத்தினதும் அடிப்படை பொறுப்பு என்றும் டாக்டர் ஹென்றி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சூழ்நிலையில்தான், விஞ்ஞானி பொன்ராஜ் அவர்கள் சமூகப் பொறுப்புணர்வின் அடிப்படையில் கருத்து தெரிவித்ததாகவும், ஆனால் அவரது பேச்சுக்கள் திட்டமிட்டு வேறு கோணத்தில் சித்தரிக்கப்பட்டு அவரை சமூக விரோதியாக காட்ட முயற்சிகள் நடைபெற்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், திரு. பொன்ராஜ் அவர்கள் ஏற்கனவே தாம் கூறிய கருத்துக்கள் யாருக்கேனும் மனவருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக வெளிப்படையாக வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்துவிட்டார்.
இதன் மூலம் அவர் அந்த விவகாரத்திற்கு ஜனநாயக ரீதியிலும் நாகரிக ரீதியிலும் முற்றுப்புள்ளி வைத்துவிட்ட நிலையில், தொடர்ந்து அவர்மீது புகார்கள் அளிக்கப்படுவது மற்றும் அரசியல் நோக்கமுடைய பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என சமூக ஊடகங்களில் பரப்பப்படுவது மிகுந்த கவலையை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நாட்டிற்காக வாழ்நாளை அர்ப்பணித்த ஒரு விஞ்ஞானி இன்று சமூக ஊடகங்களின் தவறான சித்திரிப்பால் குற்றவாளியாக காட்டப்படுவது வேதனையானது மட்டுமல்ல, அறிவாளிகளை மதிக்கும் தமிழர் பண்பாட்டிற்கே ஒரு கேள்விக்குறியாக மாறிவிடும்” என்று டாக்டர் ஹென்றி அவர்கள் தனது அறிக்கையில் கடுமையாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இளைஞர்களின் எதிர்காலம், வேலைவாய்ப்பு, கல்வி, சமூகநீதி, பெண்கள் பாதுகாப்பு மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றில் முழு கவனம் செலுத்த வேண்டிய இந்த நேரத்தில், தேவையற்ற சர்ச்சைகள் மற்றும் உணர்ச்சி தூண்டும் அரசியல் விவாதங்கள் மக்கள் கவனத்தை திசைதிருப்பக்கூடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள், குறிப்பாக பெண்களும் இளைஞர்களும், தற்போதைய அரசிடம் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் பழிவாங்கும் அரசியலை விட மக்கள் நல ஆட்சிக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், விஞ்ஞானி பொன்ராஜ் அவர்கள் மீது எந்தவித அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல், மாறாக அவரின் உயிர், உடமை, கண்ணியம் மற்றும் கருத்துரிமைக்கு உரிய பாதுகாப்பு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும், நாட்டிற்காகவும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர் ஆற்றிய சேவையை அரசு அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, “தமிழகத்தின் எதிர்காலம் வெறுப்பிலும் பழிவாங்கும் அரசியலிலும் இல்லை; அறிவையும் ஒழுக்கத்தையும் மதிக்கும் நல்லாட்சியில்தான் உள்ளது” என்று டாக்டர் ஹென்றி அவர்கள் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்

