அனைத்து தாய்மார்களுக்கும்அன்னையர் தின வாழ்த்து

Loading

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) மற்றும் அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், அன்னையர் தினத்தை முன்னிட்டு அனைத்து தாய்மார்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து உணர்வுபூர்வமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியதாவது..

அன்னை அன்பின் பேராற்றல்! இந்த உலகில் மனிதன் முதலில் காணும் முகம் தாய். முதலில் உணரும் அன்பு தாய். முதலில் பெறும் பாதுகாப்பு தாய். முதலில் நம்பிக்கை தரும் உயிரும் தாய் தான்.

ஒரு தாய் என்பது ஒரு குடும்பத்தின் இதயம் மட்டுமல்ல. ஒரு தலைமுறையை உருவாக்கும் பேராற்றல் கொண்ட சக்தி. தன் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்க வேண்டும் என்பதற்காக, தன் ஆசைகள், கனவுகள், சுகங்கள் அனைத்தையும் அமைதியாக தியாகம் செய்பவள் தாய்.

எனவேதான் அனைத்து மதங்களும் போற்றும் அந்த உன்னத உறவு தாய்மை. “மாதா, பிதா, குரு, தெய்வம்” என்று தெய்வத்திற்கு முன்பாகவே தாய்க்கு இந்து மதம் முதலிடம் அளிக்கிறது. அன்னை பராசக்தியை ஆற்றலின் வடிவமாக வழிபடும் மரபு நம்மிடம் உண்டு. “தாயின் பாதங்களுக்குக் கீழேதான் சொர்க்கம் இருக்கிறது” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாயின் சிறப்பை உயர்த்திப் பிடித்துள்ளார்கள். அன்னை மரியாள் தியாகத்தின் வடிவமாகப் போற்றப்படுகிறார். “ஒரு தாய் தன் பிள்ளையைத் தேற்றுவது போல நான் உங்களைத் தேற்றுவேன்” என்று பைபிளில் இறைவன் தாய்மையின் குணத்தோடு ஒப்பிடப்படுகிறார். புத்தம் & சமணம் எல்லா உயிர்களிடத்தும் ஒரு தாய் தன் ஒரே பிள்ளையிடம் காட்டும் அன்பைச் செலுத்த வேண்டும் என்று இந்த மதங்கள் போதிக்கின்றன.

அன்னை என்பவள் வெறும் உறவுமுறை மட்டுமல்ல, அவள் ஒரு பேராற்றல். குடும்பம் எனும் கோட்டையைத் தாங்கிப் பிடிக்கும் அஸ்திவாரம் தாய். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக தன் கண்ணீரையே மறைத்து சிரிப்பவள் தாய். கணவன் சோர்வடைந்த நேரத்தில் அவருக்கு துணிவையும் நம்பிக்கையையும் அளிக்கும் முதல் நண்பர் தாய். பிள்ளைகள் விழுந்தால் கைகளை நீட்டி எழுப்புபவள். தோல்வியடைந்தாலும் ‘நீ முடியும்’ என்று நம்பிக்கை விதைப்பவள். வலியிலும் வேதனையிலும் கூட குடும்பத்திற்காக சிரிப்பவள். அவள்தான் அன்னை!

ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குவது சட்டங்கள் அல்ல. ஒரு நல்ல தாயின் வளர்ப்பு தான். அன்னையின் அன்பு என்பது எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தூய பாசம். அவள் கோபப்பட்டாலும் அன்பால்… கண்டித்தாலும் நல்வழிக்காக… அழுதாலும் குடும்பத்திற்காக! இந்த அன்னையர் தினத்தில், உலகிலுள்ள அனைத்து தாய்மார்களுக்கும் என் இதயம் கனிந்த மரியாதையையும், நன்றிகளையும், அன்பையும் தெரிவித்துக்கொள்வதாக டாக்டர் ஆ.ஹென்றி தனது அன்னையர் தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

0Shares