12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி 90.63 சதவிகிதம்
![]()
திருவள்ளூர் மாவட்டத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவிகிதம் 90.63 சதவிகிதம் : மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து :
திருவள்ளூர் மே 10 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்ச்சி சதவிகிதம் உயர்ந்து 90.63 சதவிகிதம் அடைந்துள்ளதால் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அவர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சொ.கற்பகம் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். அப்போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது :
மார்ச், ஏப்ரல் 2026 இல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு முடிவுகள் 08.05.2026 அன்று காலை 9.30மணி அளவில் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் திருவள்ளூர் வருவாய் மாவட்ட அளவில் மொத்தமுள்ள 249 பள்ளிகளை உள்ளடக்கிய 117 தேர்வு மையங்களில் எழுதிய மாணவர்கள் 13586 மற்றும் மாணவிகள் 15116 ஆக மொத்தம் 28702 மாணாக்கர்கள் தேர்வு எழுதினார்கள்.
இதில் மாணவர்கள் 12500 பேர், மாணவிகள் 14512 பேர் மொத்தம் 27012 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர், திருவள்ளூர் வருவாய் மாவட்ட அளவில் மாணவர்கள் 92.01 சதவீதம் தேர்ச்சியும், மாணவிகள் 96.00 சதவீதம் தேர்ச்சியும் ஆக மொத்தம் 94.11 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த கல்வியாண்டை விட 2.62 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 36 வது இடத்திலிருந்து 27 வது இடத்திற்கு இக்கல்வியாண்டில் முன்னேறியுள்ளது.
மேலும் அரசு பள்ளிகளில் (102 அரசுப் பள்ளிகள்) பயிலும் 6211 மாணவர்கள், 7506 மாணவிகள் ஆக மொத்தம் 13717 தேர்வு எழுதினார்கள். அதில் மாணவர்கள் 5409 மற்றும் மாணவிகள் 7023 ஆக மொத்தம் 12432 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் மாணவர்கள் 87.09% மாணவிகள் 93.57% மொத்தம் 90.63% ஆகும். கடந்த கல்வியாண்டை விட 4.38 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 38 வது இடத்திலிருந்து 28 வது இடத்திற்கு இக்கல்வியாண்டில் முன்னேறியுள்ளது.
கடந்த வருடம் 64 பள்ளிகள் 100 சதவீதம் பெற்ற நிலையில் இவ்வருடம், வருவாய் மாவட்ட அளவில் 70 பள்ளிகள் ( 6 அரசு பள்ளிகள் உட்பட) 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.இந்த தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த பணியாற்றிய அனைத்து கல்வித்துறை அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ செல்வங்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் அமுதா(திருவள்ளூர்), பன்னீர் (பொன்னேரி)(பொ), ராஜு, உதவி திட்ட அலுவலர் பாலமுருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக உதவியாளர் மீனாகுமாரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக எழுத்தர் (பள்ளி கல்வி) பவானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

