திருப்பதி பிரம்மோற்சவ விழா: 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!
திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.பக்தர்களின் பாதுகாப்புக்காக 3 ஆயிரம் நவீன கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.இந்த பிரம்மோற்சவ விழா வருகிற 2-ந் தேதி விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் சிறப்பாக செய்துவருகிறது.அந்தவகையில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்புக்காக 3 ஆயிரம் உயர் தெளிவு திறன் கொண்ட கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக திருப்பதிதேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கூறியதாவது:-
கூட்டம் அதிகமாக இருந்தால், கூட்டத்தை மாற்றி விடுதல், பாதைகள் திறந்து பாதுகாப்பு பணியாளர்களை முன்கூட்டியே நியமித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
அலிபிரியில் கூடுதலான வாகன நிற்கும் இடங்கள், வசதி செய்யப்பட்டுள்ளன. சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கோவிலில் நடைபெறும் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வி.ஐ.பி. பரிந்துரை கடிதங்களும் ரத்து செய்யப்படுகின்றன.
28 மாநிலங்களில் இருந்து 300 கலாசார குழுக்கள் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளன. கருடசேவையின் போது 20 மாநிலங்களில் இருந்து கலைஞர்கள் கருடசேவையில் பங்கேற்பார்கள். 50 டாக்டர்கள், 60 துணை டாக்டர்கள், தெற்கு மாட வீதியில் தற்காலிக 10 படுக்கை மருத்துவமனை மற்றும் 12 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.