சென்னையில் 228 பேர் பலி…ரெயில்வே அதிகாரிகள் கவலை!
நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையில் சென்னையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 228 பேர் ரெயில் மோதி பலியாகியுள்ளனர் என ரெயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்,
ஓடும் ரெயிலில் ஏறவோ, இறங்கவோ கூடாது, படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும், ரெயில் வரும்போது தண்டவாளங்களை கடக்க வேண்டாம், ரெயில் நிலையங்களில் நடைமேடையில் உள்ள மஞ்சள் பாதுகாப்பு கோட்டிற்குப் பின்னால் நிற்க வேண்டும் உள்பட பயணிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது.
மேலும், ரெயில் நிலையம் மற்றும் ரெயில்களில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள், ரெயில்களில் படிகளில் தொங்கி பயணிப்பவர்கள், தண்டவாளத்தை கடந்து செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் எழும்பூர், சென்ட்ரல் உள்பட அனைத்து முக்கியமான ரெயில் நிலையங்களிலும் நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி இதுகுறித்து ரெயில் பயணிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
என்னதான் ரெயில்வே நிர்வாகம், ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும் ஆங்காங்கே ரெயில்வே தண்டவாளங்களை கடக்கும்போது ரெயில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அந்தவகையில், நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 228 பேர் மின்சார ரெயில் மோதி உயிரிழந்துள்ளதாகவும், 34 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை கோட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையில் மின்சார ரெயில்களில் பயணம் செய்தபோது தவறி விழுந்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 45 பேர் காயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.