ஈரோட்டில் பிரமாண்ட மல்டிப்ளெக்ஸ் திரையரங்கம்
![]()
ஈரோட்டிற்கு வருகிறது பிரமாண்ட மல்டிப்ளெக்ஸ் திரையரங்கம்: ‘Fortune City’ – ‘Broadway Cinemas’ அதிகாரப்பூர்வ இணைப்பு!
ஈரோடு, அக்டோபர் – 01
ஈரோடு மக்களுக்கும் மற்றும் கொங்கு மண்டல சினிமா ரசிகர்களுக்கும் நவீன உலகத்தரத்திலான திரை அனுபவத்தை வழங்கும் வகையில், ஈரோட்டின் முன்னணி வணிக வளாகமான ‘Fortune City’ மற்றும் தென்னிந்தியாவின் முன்னணி பிரீமியம் திரையரங்க நிறுவனமான ‘Broadway Cinemas’ ஆகிய இரண்டும் கைகோர்த்துள்ளன.
இதன் மூலம் ஈரோட்டில் புதிய தலைமுறை மல்டிப்ளெக்ஸ் தியேட்டர் வளாகம் அமைக்கப்பட உள்ளது. இந்த பிரமாண்ட திரையரங்க திட்டம் வரும் ஜனவரி 2028-க்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளது.
உலகத்தரத்திலான திரை தொழில்நுட்பம்:
2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘Broadway Cinemas’, கோவை மற்றும் திருப்பூரில் அதிநவீன திரையரங்குகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. கோவையில் தென்னிந்தியாவின் முதல் ‘IMAX Laser’, தமிழ்நாட்டின் முதல் ‘EPIQ Premium Large Format’ மற்றும் ‘Luxury Gold Screen’ வசதிகளுடனும், திருப்பூரில் ‘HyperX’, ‘Vivid’ திரைகளுடனும் இயங்கி வருகிறது.
அதே போன்ற உயர்தர ஒலி-ஒளி தொழில்நுட்பம், பிரமாண்டமான திரைகள், சொகுசு இருக்கைகள் மற்றும் சிறப்பான உணவு அனுபவங்களுடன் கூடிய மல்டிப்ளெக்ஸ் திரையரங்கத்தை தற்போது ஈரோட்டிற்கும் கொண்டு வருகிறது.
‘Fortune City’ வளாகத்தில் அமையவுள்ளது:
ஈரோடு சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் (NH-544) சுமார் 42 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ‘Fortune City’, ஷாப்பிங், உணவகங்கள், பொழுதுபோக்கு, வணிக வளாகங்கள் என அனைத்தும் ஒருங்கிணைந்த மிகப்பெரிய மையமாக வளர்ந்து வருகிறது. இங்கு ஏற்கெனவே ‘Texvalley’, ‘Avenue Malls’, ‘Big Box Bazaar’ போன்ற வணிக மையங்களும், முன்னணி உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு தளங்களும் செயல்பட்டு வருகின்றன.
தற்போது ‘Broadway Cinemas’ இணைப்பு மூலம், ஈரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொங்கு பகுதி மக்களுக்கு ஒரே இடத்தில் ஷாப்பிங், உணவு மற்றும் நவீன சினிமா அனுபவம் முழுமையாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

