காய்கறிமார்க்கெட்வெங்காயவியாபாரிகளின்ஆதிக்கம்
![]()
ஈரோடு நேதாஜி மார்க்கெட் குத்தகைதாரர்களுக்கு உயிருக்கு அச்சுறுத்தல்: வெங்காய வியாபாரிகள் மீது மாநகராட்சி ஆணையரிடம் பரபரப்பு புகார்!
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் வெங்காய வியாபாரிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும், தங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் குத்தகைதாரர்கள் மாநகராட்சி ஆணையரிடம் அதிரடி புகார் அளித்துள்ளனர்.
இங்குள்ள 750-க்கும் மேற்பட்ட கடைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக வியாபாரிகளுக்கும், குத்தகைதாரர்களுக்கும் இடையே நீண்டகாலமாகப் பிரச்சினை நிலவி வருகிறது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின் முன்னிலையில் கடந்த மூன்றாம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு எட்டப்படாததால், இன்று மீண்டும் பேச்சுவார்த்தைக் கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால், இக்கூட்டத்தில் குத்தகைதாரர்கள் மட்டுமே பங்கேற்றனர்; காய்கறி மற்றும் வெங்காய வியாபாரிகள் சங்கத்தினர் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.
இதனால் அதிருப்தியடைந்த குத்தகைதாரர்கள், மாநகராட்சி ஆணையரிடம் வெங்காய வியாபாரிகளுக்கு எதிராகப் புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குத்தகைதாரர் அருண் பிரசாத், “மாநகராட்சி விதிகளின்படி எங்களுக்குச் சேர வேண்டிய சுங்கக் கட்டணத்தை, ஒரு சில பெரிய வெங்காய வியாபாரிகள் சட்டவிரோதமாகத் தாங்களே வசூலித்துக்கொண்டு எங்களை ஏமாற்றி வருகின்றனர். மேலும், தங்களின் சுயலாபத்திற்காகச் சிறு வியாபாரிகளையும், விவசாயிகளையும் தவறாகத் தூண்டிவிட்டு, மார்க்கெட்டில் தேவையற்ற சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றனர்.
இந்தச் சங்கத்தினர் பொதுச்சந்தையைத் தனியார்மயமாக்கித் தங்களது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் திட்டமிடுகின்றனர். இவர்களின் இந்த ஆதிக்கத்தால் பொதுமக்கள் மார்க்கெட்டிற்கு வரத் தயங்குவதால் சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, முறேகடுகளில் ஈடுபடும் வெங்காய மண்டி வியாபாரிகள் மீது மாநகராட்சி நிர்வாகமும், காவல் துறையும் உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; குத்தகைதாரர்களின் உரிமைகளையும் உயிரையும் பாதுகாக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். இச்சம்பவம் ஈரோடு வியாபாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

