இரா.தமிழின்பன் கண்ணில் கருப்புத் துணி கட்டி மனு
![]()
பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் கோரி கண்ணில் கருப்புத் துணி கட்டி மனு அளித்த அருந்ததியர் அரசியல் அமைப்பினர்!
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம், பாண்டியம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சத்யாபுரம் பகுதியில் வசதி இன்றி தவிக்கும் பட்டியல் குறவர் இன மக்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் கண்ணில் கருப்புத் துணி கட்டி மனு அளிக்கப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு அருந்ததியர் அரசியல் அமைப்பின் சார்பில், ஒருங்கிணைப்பாளர் இரா.தமிழின்பன் தலைமையில் நிர்வாகிகள் ஈரோடு பெருந்துறை சாலையில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்ணில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்றனர். இந்த நூதன போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் சுவாரஸ்யமும் பரபரப்பும் நிலவியது.
அவர்கள் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாண்டியம் பாளையம் ஊராட்சி சத்யாபுரம் பகுதியில் பட்டியல் குறவர் இனத்தைச் சேர்ந்த சுமார் 70 குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றன. ஆனால், அவர்களுக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. மேலும், அப்பகுதியில் முறையான சாலை வசதி, தெரு மின்விளக்கு வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்படவில்லை.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, நீண்டகாலமாக துயரப்பட்டு வரும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்கி, மின் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

