பதிவுத்துறை தலைவருக்கு FAIRA தலைவர் பாராட்டு

Loading

பதிவுத்துறையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிர்வாக சீர்திருத்தம். பதிவுத்துறை தலைவருக்கு FAIRA தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி பாராட்டு

 

தமிழ்நாடு பதிவுத்துறையின் தலைவர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஐ.ஏ.எஸ்., அவர்கள் வெளியிட்டுள்ள வழிகாட்டி மதிப்பு மற்றும் சொத்து பதிவு நடைமுறைகள் தொடர்பான தெளிவுரை சுற்றறிக்கை, பதிவுத்துறையில் நீண்டகாலமாக நிலவி வந்த பல்வேறு குழப்பங்கள், நடைமுறை சிக்கல்கள் மற்றும் பொதுமக்கள் சந்தித்து வந்த இன்னல்களுக்கு தீர்வு காணும் மிக முக்கியமான நிர்வாக சீர்திருத்த நடவடிக்கை என அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர்  டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் பாராட்டி, வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு பதிவுத்துறையின் சார்பில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டி மதிப்பு மற்றும் சொத்து மதிப்பீடு தொடர்பான தெளிவுரை சுற்றறிக்கை (சுற்றறிக்கை எண் ந.க.எண். 18549/எல்/2026. நாள்.05.05.2026.) பதிவுத்துறையில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த குழப்பங்கள், நடைமுறை சிக்கல்கள் மற்றும் பொதுமக்கள் அனுபவித்து வந்த இன்னல்களுக்கு தீர்வு காணும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிர்வாக நடவடிக்கையாக அமைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பல ஆண்டுகளாக பதிவுத்துறையில் குறிப்பாக வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் தொடர்பாக பொதுமக்கள் கடுமையான சிரமங்களுக்கு உள்ளாகி வந்தனர். ஒரு சொத்து அமைந்துள்ள பகுதியின் நான்கு பக்க எல்லைகளில் அதிகபட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த மதிப்பை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறைகள் காரணமாக, ஏராளமான பொதுமக்கள், சிறு முதலீட்டாளர்கள், வீடு வாங்கும் இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்துறையினர் தேவையற்ற அலைச்சல், கூடுதல் செலவுகள், கால விரயம் மற்றும் மன உளைச்சல்களை அனுபவித்து வந்தனர்.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஐ.ஏ.எஸ்., அவர்கள் வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கை மிகத் தெளிவான மற்றும் நடைமுறை சார்ந்த விளக்கங்களுடன் அமைந்துள்ளது. தற்போதுள்ள பதிவுத்துறை வெளியிடப்பட்டுள்ள இச்சுற்றறிக்கையின் மூலம் குடியிருப்பு கட்டிடங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், கடைகள், விவசாய நிலங்கள், மனைப்பிரிவுகள் மற்றும் ரியல் எஸ்டேட் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சொத்து பரிவர்த்தனைகளில் நிலவி வந்த சந்தேகங்கள் மற்றும் முரண்பாடுகளுக்கு தெளிவான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் பதிவுத்துறையின் மீதான நம்பிக்கை பல மடங்கு உயரும் என்பதில் எங்களுக்கு எந்தவித ஐயமும் இல்லை.

நீண்ட நாட்களாக பல்வேறு நிர்வாக மற்றும் நடைமுறை கட்டுப்பாடுகளால் கட்டுண்டு இருந்த பதிவுத்துறையின் செயல்பாடுகள், தற்போது பொதுநல நோக்கில் சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் மனசாட்சிப்பூர்வமான நிர்வாக அணுகுமுறையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன என்பது இந்த சுற்றறிக்கையின் மூலம் தெளிவாக வெளிப்படுகிறது. இதற்காக தங்களது துணிச்சலான மற்றும் நேர்மையான நிர்வாக முடிவுகள் மிகுந்த பாராட்டுக்குரியவை.

குறிப்பாக இச்சுற்றறிக்கை மூலம் ஒரு சொத்து அமைந்துள்ள பகுதியின் நான்கு பக்கமும் ஒரே சுற்றுச்சுவருக்குள் இருந்து, அதில் பல புல எண்கள் (Survey Numbers) இருந்தால், அந்தப் புல எண்களிலேயே எது அதிகப்பட்ச மதிப்பைக் (Maximum Guideline Value) கொண்டிருக்கிறதோ, அதையே ஒட்டுமொத்த நிலத்திற்கும் கணக்கிட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் நில உரிமையாளர்களுக்குத் தேவையற்ற கூடுதல் பணச்சுமை ஏற்பட்டது.

தற்போதுள்ள வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் படி அந்தந்தப் புல எண்களுக்கு               (Survey Numbers) என்ன வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ, அந்த மதிப்பைக் கணக்கிட்டுப் பதிவு செய்தாலே போதுமானது. மேலும், சொத்தின் தன்மை, பயன்பாடு, அணுகுமுறை, சாலை வசதி, இட அமைப்பு, பயன்பாட்டு வகை மற்றும் நிலத்தின் தனித்துவ அம்சங்களை கருத்தில் கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுஅதிகப்பட்ச மதிப்பை ஒட்டுமொத்த சொத்திற்கும் திணிக்கத் தேவையில்லை புல எண் வாரியாக வழிகாட்டி மதிப்பு மற்றும் தேவையற்ற கூடுதல் பணச்சுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, குடியிருப்பு பகுதி, வணிக பகுதி, தொழிற்சாலை பகுதி, விவசாய நிலம் மற்றும் மனைப்பிரிவுகள் ஆகியவற்றை ஒரே வகை மதிப்பீட்டில் அணுகாமல், அவற்றின் உண்மையான பயன்பாடு மற்றும் நிலைமை அடிப்படையில் மதிப்பீடு செய்ய வேண்டும் என வழங்கப்பட்டுள்ள தெளிவுரை மிகுந்த வரவேற்புக்குரியது.

மேலும், சொத்து அமைந்துள்ள சாலையின் தன்மை, அணுகும் வசதி, பயன்பாட்டு மாற்றம் மற்றும் வணிக முக்கியத்துவம் போன்ற காரணிகளை கருத்தில் கொள்ளாமல் அதிகபட்ச வழிகாட்டி மதிப்பை திணிக்கக் கூடாது என பதிவுத்துறை தலைவர் வழங்கியுள்ள அறிவுறுத்தல், பொதுமக்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது.

முக்கியமாக, விவசாய நிலங்களை குடியிருப்பு அல்லது வணிக நிலங்களுடன் ஒப்பிட்டு தவறான மதிப்பீடுகள் செய்யக் கூடாது என்றும், ஒரு பகுதியில் உள்ள அனைத்து சொத்துகளையும் ஒரே கோணத்தில் அணுகாமல் தனித்தனியாக பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் வழங்கப்பட்டுள்ள விளக்கங்கள் பதிவுத்துறையில் புதிய வெளிப்படைத்தன்மைக்கு அடித்தளமாக அமையும்.

மேலும், தாங்கள் தொடர்ந்து பதிவுத்துறையில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், பொதுமக்கள், ரியல் எஸ்டேட் கூட்டமைப்புகள், அனுபவமிக்க அரசு அதிகாரிகள், ஓய்வு பெற்ற நிர்வாகிகள் மற்றும் சட்ட நிபுணர்கள் ஆகியோரின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்டு அறிந்து, நடைமுறைக்கு பொருந்தாத சட்டங்களை மாற்றி அமைத்து, சிக்கலான விதிமுறைகளை எளிமைப்படுத்தி, தேவையற்ற நடைமுறைகளை நீக்கி, தெளிவான வழிகாட்டுதல்களுடன் நிர்வாக சீர்திருத்தங்களை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இத்தகைய நிர்வாக சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில், பதிவுத்துறையில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும். இடைத்தரகர்களின் ஆதிக்கம் குறையும். பொதுமக்களின் அலைச்சல் மற்றும் மன உளைச்சல் குறையும். லஞ்சம் மற்றும் முறைகேடுகள் கட்டுப்படும். தேவையற்ற பணச்சுமைகள் குறையும். பொதுமக்களின் நம்பிக்கை உயரும். சொத்து பரிவர்த்தனைகள் சட்டபூர்வமாகவும் எளிமையாகவும் நடைபெறும். தமிழக ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி மற்றும் எழுச்சி பெறும்.  அரசின் வருவாய் உயர்வதற்கும் வழிவகுக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி, இனி பதிவுத்துறையின் சேவைகள் மேலும் ஆக்கபூர்வமாகவும், பொதுமக்களுக்கு எளிதில் அணுகக்கூடியதாகவும் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். பதிவுத்துறையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிர்வாக சீர்திருத்த சுற்றறிக்கையை வெளியிட்ட தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஐ.ஏ.எஸ்., அவர்களுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என டாக்டர் ஆ.ஹென்றி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0Shares