ஈரோடு அதிமுக அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு
![]()
ஈரோடு
ஈரோடு அதிமுக அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு: கே.வி.ராமலிங்கம் ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பு
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றி, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதனிடையே, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டதன் பேரில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் தனி அணியாகச் செயல்பட்ட 25 எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றி கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்த அதிரடி திருப்பத்தைத் தொடர்ந்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் உள்ளிட்ட 25 மாவட்டச் செயலாளர்களை பதவியிலிருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக பெரியார் நகர் பகுதிச் செயலாளர் ‘பெரியார் நகர்’ இரா.மனோகரன் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
ஈரோடு மாநகர் மாவட்டக் கட்டுப்பாட்டில் ஈரோடு கிழக்கு, மேற்கு மற்றும் மொடக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகள் வரும் நிலையில், இந்த தலைமை மாற்றத்தால் கட்சிக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தின் முன் கதவு பூட்டப்பட்டு, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் தனது ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் திரண்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக என்பது திமுகவை எதிர்ப்பதற்காகத் தொடங்கப்பட்ட பேரியக்கம். ஆனால், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்ததை எங்களால் ஏற்க முடியவில்லை. எங்களது எதிர்ப்பைத் தெரிவித்த காரணத்திற்காக தன்னிச்சையாகப் பதவிகளைப் பறித்துள்ளனர். இது கட்சி விதிமுறைகளுக்கு எதிரானது. இது குறித்து முடிவெடுக்க உடனடியாகப் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். இதனை வலியுறுத்தி ஆதரவாளர்களிடம் கையெழுத்துப் பெற்று தலைமைக்கு அனுப்ப உள்ளோம்,” எனத் தெரிவித்தார். கே.வி.ராமலிங்கத்தின் இந்த நடவடிக்கையால் ஈரோட்டில் அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

