கடம்பத்தூர் ஊராட்சி வீடுகள் மற்றும் பாலம் கட்டும் பணி
![]()
திருவாலங்காடு மற்றும் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகள் மற்றும் பாலம் கட்டுமானப் பணிகள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு :
திருவள்ளூர் பிப் 07 : திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம் வேணுகோபாலபுரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பரேஸ்புரம் கிராம பகுதியில் பி.எம்.ஜென்மன் திட்டத்தின் கீழ் ரூ.50.90 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 10 வீடுகளின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரால் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் 3 புதிய உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டுவதற்கு ஆணையிடப்பட்டது. அதன்படி, குப்பம்கண்டிகை ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலம் கட்டுமானப் பணிகளையும், எல்.வி.புரம் ஊராட்சியில் ரூ.21.43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலம் பணிகளையும், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் தண்டலம் ஊராட்சியில் ரூ.17.20 கோடி மதிப்பீட்டில் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலம் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென உத்தரவிட்டார்.
இதில் உதவி செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) கோவேந்தன், திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கம்,பிரபாவதி,கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நட்ராஜ்,சௌந்தரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

