பதிவுத்துறைக்கு உடனடியாக தலைவரை நியமிக்க வேண்டுமென முதல்வருக்கு பெயிரா கடிதம்.

Loading

பதிவுத்துறைக்கு உடனடியாக தலைவரை நியமிக்க வேண்டுமென முதல்வருக்கு பெயிரா கடிதம்.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்

தமிழ்நாடு பதிவுத் துறையின் பணிகள் தொடர்ந்து தடை இல்லாமல், விரைந்து நடைபெறும் வண்ணம் பதிவுத் துறை தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டுமென கடிதம் எழுதியுள்ளார்.தமிழகத்தின் பழமையான வரலாற்று சிறப்புமிக்க துறையாகவும் மற்றும் மிகப்பெரிய அளவில் மாநிலத்திற்கு நேரடி வருவாய் ஈட்டக்கூடிய துறைகளில் ஒன்றாக தமிழ்நாடு பதிவுத் துறை திகழ்கிறது. இத்தகைய முக்கியமான துறையின் சமீபகாலமான செயல்பாடுகள் மற்றும் மக்களுக்கான சேவைகள் திருப்தி அளிக்கக்கூடிய வகையில் இல்லை என்பது பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது.

இத்தருணத்தில் கடந்த 03.02.2025 திங்கட்கிழமை முதல் பதிவுத் துறையின் தலைமை பொறுப்பினை ஏற்று நிர்வகிக்கக்கூடிய பதிவுத் துறை தலைவர் (Head of the Department) மற்றும் தலைமை கட்டுப்பாட்டு வருவாய் அதிகாரியாக (Chief Controlling Revenue Authority) பொறுப்பினை வகித்து வந்த பதிவுத் துறை தலைவர் அவர்கள் உடல் நலமில்லாத காரணத்தினால் ஒரு மாத காலத்திற்கு விடுப்பில் சென்றுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் நிர்வகித்து வந்த பணிகளில் மிகப்பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளது.

மேலும் பதிவுத்துறை தலைவரின் முக்கிய பணிகளான பதிவுத் துறையில் ஏற்படுகின்ற பிரச்சனைகள், சிக்கல்கள், வழக்குகள், முத்திரை தீர்வை, முத்திரை மற்றும் பதிவுக் கட்டணங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தலைமை ஏற்று கண்காணிப்பது, ஆவணப்பதிவு முத்திரைத் தீர்வை வசூலித்தல் இந்திய முத்திரைச் சட்டம் 1899 பிரிவு 56-இன் கீழான மேல்முறையீடு முத்திரைத் தீர்வை திருப்புத் தொகை மாநில கணக்காயர் தணிக்கை மற்றும் பிற நிர்வாக பிரச்சனைகள், சந்தை மதிப்பு வழிகாட்டியினை நிர்ணயித்தல் மற்றும் நிர்வகித்தல் இந்திய முத்திரைச் சட்ட பிரிவு 47A(5) மற்றும் 47A/(6) இன் கீழான மேல்முறையீடு மற்றும் பிற நிர்வாக பிரச்சனைகள், உள்தணிக்கை பிரிவு பல்வேறு திருமண சட்டங்களின் கீழான பதிவுகள் மற்றும் சார் பதிவக எல்லைகள் குறித்த பணி மற்றும் சங்கங்கள், சீட்டு நிதியங்கள், கூட்டு பங்காண்மை, நிறுவனங்களின் பதிவுகள்,  அலுவலக கட்டடங்கள், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, வருவாய் ஒத்திசைவு குறித்த பணிகள் மற்றும் பிற நிர்வாக பிரச்சனைகள், பணியாளர்கள் இடமாற்றம், குறைவு முத்திரை தீர்வை, நீதிமன்ற வழக்குகள் மற்றும் தணிக்கை சம்பந்தமாக கண்காணிப்பது விசாரணை மேல்முறையீடு போன்றவைகளை கண்காணிப்பது மற்றும் தலைமையேற்பது போன்றவைகள் ஆகும்.

தற்பொழுது பதிவுத் துறையின் தலைவர் அவர்கள் ஒரு மாத கால விடுப்பில் சென்றுள்ளதன் காரணமாகவும் மற்றும் அவர் மேற்கொண்டு வந்த பொறுப்புகளுக்கு இது நாள் வரை யாரும் நியமிக்கப்படாததின் காரணமாகவும் பதிவுத் துறையின் நிர்வாகம் மற்றும் அலுவல் சம்பந்தப்பட்ட பணிகள் சரியான முறையில் நடைபெறாமல் தொய்வு ஏற்பட்டு, மந்தகதியில் நடைபெறும் காரணத்தினால் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் இந்நிலை தொடர்ந்தால் இன்னும் மோசமான சூழலுக்கு பதிவுத் துறையின் செயல்பாடுகள் தள்ளப்படும் என்கின்ற அச்ச உணர்வும் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.

மேலும் அனைத்து துறைகளிலும் அத்துறை சம்பந்தப்பட்ட தலைவர் மற்றும் உயர் அதிகாரிகள் விடுப்பில் செல்லும் போது  அவர் மேற்கொண்டு செயலாற்றி வந்த பணிகளில் தொய்வு ஏற்படாத வண்ணம் அத்துறை சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள், நிர்வாக செயல்பாடுகள் குறித்த புரிதல் உள்ள அடுத்த கட்ட அதிகாரியை தற்காலிகமாக பொறுப்பில் நியமித்து,  மேற்குறிப்பிட்ட பணிகளை தடையின்றி தொடர்ந்து நடைபெறும் வகையில் வழிவகை செய்வது வழக்கமான ஒன்று.

ஆகவே பெருமதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கண்ட பிரச்சினைகளை தங்கள் கூடுதல் கவனத்தில் கொண்டு, மேற்குறிப்பிட்ட அனைத்து நிர்வாக செயல்பாடுகளையும்  செயல்படுத்த வேண்டிய மிக முக்கிய பொறுப்பும், கடமையும் பதிவுத் துறை தலைவருக்கு உண்டு என்கின்ற காரணத்தின் அடிப்படையிலும் மற்றும் தற்பொழுது பதிவுத் துறையில் நிலவுகின்ற பிரச்சனைகளையும், சூழலையும் கவனத்தில் கொண்டு, தமிழ்நாடு பதிவுத் துறைக்கான நிரந்தர அல்லது தற்காலிக தலைவரை விரைந்து நியமித்து உடனடியாக தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ஃபெயிரா கூட்டமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்வதாக தமிழக முதல்வருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்

 

0Shares