மின்துறை அமைச்சருக்கு பெயிரா தலைவர் ஹென்றி கடிதம்.
மின்துறை அமைச்சருக்கு பெயிரா தலைவர் ஹென்றி கடிதம்.
தமிழ்நாடு மின்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, புதிதாக வீடு கட்டும் பொது மக்களின் நலன் கருதி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
தமிழகத்தில் இருக்கின்ற பெருநகரங்களின் புறநகர் பகுதிகளில் அதிகளவில் பொதுமக்களும், கட்டுனர்களும் மனைகளை வாங்கி ஆர்வமாக வீடுகளை கட்டும் பணியை மேற்கொள்கின்றனர். அப்படிப்பட்ட பொதுமக்கள் வீடுகளை கட்டுவதற்காக மின் இணைப்பு (1A) கோரி விண்ணப்பித்து பல நாட்கள் காத்திருந்தும் தற்பொழுது மின்சார அலுவலகத்தில் போதிய மின் மீட்டர்கள் இல்லாத காரணத்தால் மின்சார அலுவலகத்தை அணுகும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கும் அலைக்கழிப்புக்கும் உள்ளாகும் சூழ்நிலை
தற்போது ஏற்பட்டுள்ளது.
பல மாதங்கள் கடந்தும் மின்சார அலுவலகத்தில் போதிய அளவில் மின் மீட்டர்கள் இல்லாததால் மின் இணைப்பு பெற இயலவில்லை. மின் இணைப்பு பெறாததால் உரிய நேரத்தில் பொதுமக்கள் திட்டமிட்டபடி வீடுகள் கட்ட இயலவில்லை.
மேலும் வீடு கட்ட வங்கிகளில் கடன் பெற்ற பொதுமக்களும், வாடிக்கையாளர்களுக்கு வீடுகளை முன்பதிவு செய்த கட்டுனர்களும் மின்சாரத் துறையின் இந்த செயலால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர்.
ஆகவே மாண்புமிகு மின்துறை அமைச்சர் அவர்கள் மேற்கண்ட வீடு கட்டும் பணியை மேற்கொள்கின்ற கட்டுனர்கள் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருதி, மேற்கண்ட பிரச்சினையை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, கனிவுடன் பரிசீலித்து, மின் மீட்டர் பற்றாக்குறையை போக்கி, புதிதாக வீடுகளை கட்டுகின்ற பொதுமக்களுக்கும், கட்டுனர்களுக்கும் போதிய அளவிற்கு தங்கு தடை ஏதுமின்றி மின்துறை சார்பில் மின் மீட்டரை விநியோகித்தோ, அல்லது நுகர்வோர் தரப்பில் மின் மீட்டரை வெளிச்சந்தையில் இருந்து வாங்கி பொருத்திக் கொள்ளும் வகையிலோ உரிய நடவடிக்கையை மேற்கொண்டு, விரைவில் வழிவகை செய்ய வேண்டுமென பொதுமக்கள் நலன் கருதி மின்துறை அமைச்சருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கடிதம் எழுதி உள்ளார்.