வீட்டுவசதி துறை அமைச்சருக்கு ஃபெயிரா தலைவர் கடிதம்.
வீட்டுவசதி துறை அமைச்சருக்கு ஃபெயிரா தலைவர் கடிதம்.
தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு சு.முத்துசாமி அவர்களுக்கு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், வீட்டு மனை அபிவிருத்தியாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, புதிய வீட்டுமனை பிரிவு அமைப்பதற்கான இனங்களில் சரியான வழிகாட்டி சுற்றறிக்கை வெளியிட வேண்டுமென வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்
புதிய வீட்டுமனை பிரிவுகளை அமைப்பதற்கான திறந்தவெளி நிலம் (OSR) சம்பந்தமான, நகர் ஊரமைப்பு இயக்குனர் அவர்களின் வழிகாட்டு சுற்றறிக்கை எண் ROC NO.4367/2019/TCP2 தேதி: 14.08.2021 இல் ஒரு ஹெக்டேருக்குள் அமைக்கப்படும் வீட்டுமனை பிரிவுக்கான (OSR) திறந்தவெளி நிலத்திற்கு ஈடாக சாலைகள் நீங்கலாக விற்பனைக்குரிய நிலத்திற்கு, நிலமாகவோ அல்லது அதற்குண்டான சந்தை மதிப்பில் 10% சதவீதம் கட்டணமாகவோ செலுத்தும் வகையில் வழிவகை செய்து தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், மீண்டும் அதே விண்ணப்பதாரர் அவர் பெயரில் உள்ள மேற்கண்ட வீட்டுமனை பிரிவிற்கு அருகிலுள்ள மிகை நிலத்தில் மேற்கண்ட OSR பயனை அடையும் வகையில் கூடுதலாக வீட்டுமனை பிரிவை ஏற்படுத்த எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்கின்ற தெளிவுரை இதில் குறிப்பிடப்படவில்லை.
மேலும் இந்த விண்ணப்பதாரரின் மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளிட்ட இரத்த சம்பந்தப்பட்டவர்கள் பெயரில் அருகில் உள்ள நிலத்திற்கு மேற்கண்ட வகையில் (OSR) நிலம் சம்பந்தமான பலனை அடையும் வகையில் வீட்டுமனை பிரிவு அமைக்க கால அவகாசமும் இதில் குறிப்பிடப்படவில்லை.
ஆகவே, பெருமதிப்பிற்குரிய மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள், மேற்கண்ட ஒரு ஹெக்டேருக்குள் புதிய வீட்டுமனை பிரிவினை அமைக்கும் இனங்களில் திறந்தவெளி நிலம் சம்பந்தமாக கட்டுனர்கள், வீட்டுமனை அபிவிருத்தியாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை தாங்கள் கருத்தில் கொண்டு,
ஒரு ஹெக்டேருக்குள் மேற்கண்ட வகையில் அருகருகே அமைக்கும் புதிய வீட்டுமனை பிரிவுகளுக்கு ஒரே விண்ணப்பதாரர் பெயரில் விண்ணப்பிக்க நேரிடும் இனங்களில் இரண்டு ஆண்டு காலத்திற்குப் பிறகு விண்ணப்பிக்கலாம் என்கின்ற கால அவகாசத்தையும்,
அதே விண்ணப்பதாரர் தமது மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளிட்ட இரத்த சம்பந்தப்பட்டவர்களின் பெயரில் விண்ணப்பிக்க நேரிடும் இனங்களில் ஓராண்டு காலத்திற்குப் பிறகு விண்ணப்பிக்கும் வகையிலும், கால அவகாசத்தை நிர்ணயித்து, சலுகை வழங்கி புதிய வழிகாட்டு நெறிமுறை மற்றும் சுற்றறிக்கையை வெளியிட்டு உதவிட வேண்டுமென பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி வீட்டுவசதி துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.