திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பால் பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் பெற புகார் பெட்டி :
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்ததையடுத்து மனுக்களை பெற புகார் பெட்டி அமைக்கப்பட்டு உள்ளது. வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி ஆட்சியர் பா.பொன்னையாவிடம் மனு அளித்துச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தால் சட்டமன்றத் தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்தது. இதையடுத்து மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டு, பொது மக்களின் மனுக்களை பெறுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் புகார் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் அறுவுறுத்தலின் பேரில், பொதுமக்கள், தங்களது மனுக்களை புகார் பெட்டியில் போட்டுச் சென்றனர்.அதே போல் திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகம், மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் புகார் மனுக்களை போடுவதற்காக புகார் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது.