திருச்சியில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பாமக முற்றுகை போராட்டம் .
திருச்சி: வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அனைத்து சாதியினருக்கும், வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து அனைத்து இடங்களிலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். இந்த வகையில் இன்று திருச்சி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி கண்டோன்மெண்ட் பாரதிதாசன் சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட செயலாளர் திலீப்குமார், துணைப் பொதுச் செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில துணைப் பொதுச் செயலாளர் பிரின்ஸ் முன்னிலை வகித்தார் கிழக்கு மாவட்ட செயலாளர் சரவணன், மாநகர் மாவட்ட தலைவர் வினோத், கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன், மாநில துணைத்தலைவர் உமாநாத், மாநில துணைத்தலைவர் மணிமாறன், மாநகர் மாவட்ட அமைப்பு செயலாளர் எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர் அணி பொறுப்பாளர் கருப்பு கார்த்திக், மேற்குத் தொகுதி செயலாளர் அருண், வேலு சேவியர், எடமலைப்பட்டிபுதூர் முத்து உள்பட ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சியினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பாமக நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் சந்தித்து மனு அளித்தனர்.