மாவட்ட ஆட்சியருக்கு இந்த நிலை என்றால் பொதுமக்களுக்கு?
![]()
ஐஏஎஸ் பெண் அதிகாரிக்கேஇத்தகைய நிலையா? ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்திஉரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
அரசியல் செல்வாக்குக்கு சட்டம் அடிபணியக் கூடாது – பெண்களின் கண்ணியமும் அரசு அதிகாரிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் புகார் விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – டாக்டர் ஆ. ஹென்றி வலியுறுத்தல்!
அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி அவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திருமதி ஜெ.இ. பத்மஜா, இ.ஆ.ப. (IAS) அவர்களுக்கு ஆபாசமான மற்றும் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக, தமிழக அரசின் கவனத்தை ஈர்த்து தனது கடுமையான கண்டனத்தையும், பாரபட்சமற்ற சட்ட நடவடிக்கை கோரிக்கையையும் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைமை நிர்வாகப் பொறுப்பை வகிக்கும் மாவட்ட ஆட்சியர் போன்ற உயர் பொறுப்பில் இருக்கும் பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கே இத்தகைய புகாரை அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகிறது.
கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. சி. அருள் விக்னேஷ் அவர்கள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரடியாகக் காவல்துறையிடம் புகார் அளித்திருப்பதும், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களும் இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.
ஒரு மாவட்டத்தின் நிர்வாகத் தலைவராகப் பணியாற்றும் பெண் அதிகாரிக்கே இத்தகைய புகார் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால், அதிகாரமும் அரசியல் செல்வாக்கும் இல்லாத சாமானியப் பெண்களின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே இயல்பாகவே கேள்விகள் எழுகின்றன.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் என்பவர் சட்டத்திற்கு உட்பட்டவரே தவிர, சட்டத்திற்கு மேலானவர் அல்ல. மக்கள் பிரதிநிதித்துவம் என்பது அதிகாரத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பல்ல; மக்களின் நம்பிக்கையைப் பாதுகாத்து, பெண்களின் கண்ணியத்தையும் அரசு அதிகாரிகளின் சுயமரியாதையையும் மதித்து நடப்பதற்கான பொறுப்பாகும்.
இந்த விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தரப்பிலிருந்து பல்வேறு விளக்கங்களும் மறுப்புகளும் முன்வைக்கப்படலாம். குறுஞ்செய்திகளைத் தாம் அனுப்பவில்லை, தனது உதவியாளர் அல்லது அலுவலக நிர்வாகி அல்லது உடன் இருப்பவர்கள் அனுப்பியிருக்கலாம்; இதற்கும் தமக்கும் தொடர்பில்லை என்று கூறி பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ளும் விளக்கங்களும் வெளிவரலாம்.
மேலும், இந்த விவகாரத்தின் தீவிரத்தைக் குறைப்பதற்கும், செய்திகளின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கும், ஆளுங்கட்சிக்கு ஏற்படக்கூடிய அரசியல் அவப்பெயரைக் குறைப்பதற்கும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படலாம்.
ஆனால், எந்த விளக்கமும் முறையான சட்ட விசாரணைக்கு மாற்றாக இருக்க முடியாது. உண்மையில் குறுஞ்செய்திகளை அனுப்பியது யார், எந்தக் கைப்பேசியிலிருந்து அனுப்பப்பட்டது, யாருடைய அறிவுறுத்தலின் பேரில் அனுப்பப்பட்டது, சம்பந்தப்பட்ட நபர்களின் பங்கு என்ன என்பவை அனைத்தும் டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.
குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் என்பதற்காக எந்தவிதமான அரசியல் சலுகையும் வழங்கப்படக் கூடாது. அதேபோல், விசாரணை முடிவதற்கு முன்பே யாரையும் குற்றவாளியாகக் கருதாமல், ஆதாரங்களின் அடிப்படையில் சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும்.
அரசின் கவனத்திற்கு முன்வைக்கும் முக்கியமான கோரிக்கைகள்:
- மாவட்ட ஆட்சியர் அளித்த புகார் தொடர்பாக அரசியல் தலையீடற்ற, சுதந்திரமான மற்றும் விரைவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
- குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்பதற்காக எந்தவிதச் சலுகையும் வழங்கப்படாமல் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
- குறுஞ்செய்திகள், வாட்ஸ்அப் உரையாடல்கள், கைப்பேசி விவரங்கள் உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் ஆதாரங்களும் பாதுகாக்கப்பட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
- உயர் காவல்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் விசாரணை நடைபெற்று, அதன் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்.
- புகார் அளித்துள்ள பெண் மாவட்ட ஆட்சியருக்கும், விசாரணைக்கு உதவும் சாட்சிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அரசியல் அழுத்தம், மிரட்டல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கக் கூடாது.
- சம்பவத்தின் தன்மைக்குப் பொருந்தும் வகையில் POSH சட்டம், 2013 உள்ளிட்ட தொடர்புடைய சட்டங்களின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
- மாநிலம் முழுவதும் பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் அனைத்து நிலைகளிலும் பணியாற்றும் பெண் அரசு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- அரசியல் பதவி, அதிகாரம் அல்லது செல்வாக்கைப் பயன்படுத்தி அரசு அதிகாரிகளை அச்சுறுத்துதல், அவமதித்தல் அல்லது அவர்களின் சுதந்திரமான நிர்வாகப் பணியில் தலையிடுதல் போன்ற செயல்கள் தொடர்பான புகார்களில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
முதலமைச்சர் அவர்களுக்கு முக்கியமான வேண்டுகோள்!
கோடிக்கணக்கான மக்கள் உங்கள் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த அரசின் நிர்வாகக் கட்டமைப்பை முன்னெடுத்துச் செல்லும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அரசு அதிகாரிகள் அரசியல் அழுத்தமின்றி சுதந்திரமாகவும் நேர்மையாகவும் பணியாற்றுவதற்கான பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் தலையாய கடமையாகும்.
ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இத்தகைய புகார் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது என்றால், சாதாரணப் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்கு எதிராக எவ்வாறு துணிந்து புகார் அளிப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது.
அரசியல் அதிகாரம் என்பது சட்டத்திற்கு மேலான அதிகாரமல்ல. மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அரசியல் செல்வாக்கு என்பது சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்கான கவசமாக மாறிவிடக் கூடாது.
எனவே, இந்த விவகாரத்தில் எந்தவிதமான அரசியல் சமரசத்திற்கும் இடமளிக்காமல், புகாரின் உண்மைத்தன்மையை முழுமையாக விசாரித்து, ஆதாரங்களின் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் அளித்த பெண் அதிகாரியின் பாதுகாப்பையும், அரசு அதிகாரிகளின் சுயமரியாதையையும், பொதுமக்களின் நம்பிக்கையையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இன்றைய அரசின் நடவடிக்கை என்பது இந்த ஒரு புகார் தொடர்பான முடிவாக மட்டும் இருக்காது; எதிர்காலத்தில் தமிழகத்தில் பணியாற்றும் ஒவ்வொரு பெண் அரசு அதிகாரிக்கும், ஒவ்வொரு பெண் பணியாளருக்கும் அரசு அளிக்கும் பாதுகாப்பிற்கான முன்னுதாரணமாக அமையும்.
அரசியல் அதிகாரத்திற்கு மேலானது சட்டத்தின் அதிகாரம்!
பெண்களின் கண்ணியத்திற்கு மேலானது எந்தப் பதவியும் அல்ல!
சட்டம் அனைவருக்கும் சமம் என்பதைச் செயலால் நிரூபிக்க வேண்டிய நேரம் இது!
இவ்வாறு அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி அவர்கள் தமிழக அரசின் கவனத்தை ஈர்த்து வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

