பெண் குழந்தையை கடத்திய தாய் மகள் கைது

Loading

திருவள்ளூர் அருகே  பிறந்து 24 நாட்களே ஆன பெண் குழந்தையை கடத்திய திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த தாய் மகள் கைது : குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைப்பு :

திருவள்ளூர் நவ 24 : திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்த பிரியதர்ஷினி( 20)-க்கும் அதே திருநின்றவூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு கடந்த 2026 அக்டோபர் மாதம் 28-ஆம் தேதி  திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததுடன், 20 நாட்கள் கழித்து மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து வருமாறு அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் பிரியதர்ஷினியின் கணவருக்கு தெரிந்த நபரான திருநின்றவூர் பள்ளத்தெரு, பெரியகாலனியைச் சேர்ந்த நரேஷ் என்பவருக்கும் ஜெயப்பிரியா (20) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம்  திருமணமான நிலையில் மூன்று மாத கர்ப்பமாக இருந்த போது கடந்த ஜூன் மாதம்  ஜெயப்பிரியாவுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக  கூறப்படுகிறது.  இதனால் தனக்குக் குழந்தை பிறக்காது என எண்ணிய ஜெயப்பிரியா,  பிரியதர்ஷினியின்  குழந்தையை எடுத்துக் கொள்ள திட்டமிட்டு, தனது தாயார்  புவனா (38)  என்பவருடன் சேர்ந்து கடந்த நவம்பர் 20 ஆம் தேதி  பிரியதர்ஷினியின் வீட்டிற்குச் சென்று அவரிடம் நலம் விசாரித்துள்ளனர்.
அப்போது மறுநாள் நவம்பர் 21-ஆம் தேதி   திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லலாம் எனக் கூறி பிரியதர்ஷினியை ஜெயப்பிரியா  அழைத்துள்ளார். அதன்படி கடந்த 21-ஆம் தேதி  பிரியதர்ஷினி என்பவருடன் ஜெயப்பிரியா மற்றும் அவரது தாய்  புவனா ஆகிய மூவரும் ரயில் மூலம் திருநின்றவூரிலிருந்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு வந்து மருத்துவரைச் சந்தித்துள்ளனர்.
அப்போது குழந்தைக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யுமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.  இதனையடுத்து, பிறந்து 24 நாட்களே ஆன பெண் குழந்தையை தாய் புவனாவிடம் ஒப்படைத்துவிட்டு,  பிரியதர்ஷினியும்,  ஜெயப்பிரியாவும் திருவள்ளூர் தேரடி அருகே உள்ள கோகுல் ஸ்கேன் சென்டருக்குச் சென்று டோக்கன் பெற்றுள்ளனர். அப்போது ஸ்கேன் எடுப்பதற்கு காலதாமதமாகும் என்றும், மறுநாள் வருமாறும் ஸ்கேன் சென்டர் ஊழியர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையில், ஸ்கேன் சென்டருக்கு வந்திருந்த  ஜெயப்பிரியா, அவரது தாய்  புவனாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, குழந்தையை எடுத்துச் சென்று தனக்குத் தெரிந்த விஷ்ணுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த லத்திகா என்பவரிடம் ஒப்படைக்குமாறும், பின்னர் தான் வந்து குழந்தையைப் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி தாய் புவனா குழந்தையைபெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று லத்திகாவிடம் ஒப்படைத்துள்ளார்.   அதனைத் தொடர்ந்து, ஜெயப்பிரியா  உனது குழந்தையை யாரோ ஒரு நபர் தூக்கிக்கொண்டு ஓடிவிட்டார். அவரைப் பிடிப்பதற்காக காவல்துறையினர் விரட்டிச் சென்றுள்ளனர்.   காவல்துறையினர் குழந்தையை மீட்டுக் கொண்டு வீட்டிற்கு வந்துவிடுவார்கள் என்று  பிரியதர்ஷினியிடம் பொய்யான தகவலைக் கூறி அவரை நம்ப வைத்து அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் குழந்தையை காவல்துறையினர் மீட்டுக் கொண்டு வராததால் சந்தேகமடைந்த  பிரியதர்ஷினி, திருநின்றவூர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார்  கொடுத்தார்.  புகாரின் பேரில் திருநின்றவூர் இன்ஸ்பெக்டர் பாலகுரு தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஜெயப்பிரியா மற்றும் அவரது தாய் புவனா ஆகிய இருவரும் திட்டமிட்டு, குழந்தையை விஷ்ணு வாக்கம் கிராமத்தைச் சேர்ந்த லத்திகா என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு, குழந்தையை யாரோ கடத்திச் சென்றுவிட்டதாக நாடகமாடியது தெரியவந்துள்ளது.
 இதனையடுத்து, திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த கடத்தல் சம்பவம் நடந்ததையடுத்து திருநின்றவூர் இன்ஸ்பெக்டர் பாலகுரு, குழந்தையைப் பத்திரமாக மீட்டு,  ஜெயப்பிரியா மற்றும்  தாய் புவனா ஆகிய இருவரையும் திருவள்ளூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ஒப்படைத்தனர்.   இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் நகர இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்குப் பதிவு செய்து ஜெயப்பிரியா (20) மற்றும் அவரது தாய் புவனா (38) ஆகிய இருவரையும்  திருவள்ளூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1-ல் நீதிபதி சுனில் வினோத் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து தாய் மகள் இருவரையும்  புழல் மத்திய சிறையில் கொண்டுசென்று அடைத்தனர்.
0Shares