காசி தமிழ் சங்கமம் புதிய தலைமுறையுடன் இணைக்கிறது

Loading

காசி தமிழ் சங்கமம் பன்னெடுங்கால பண்பாட்டு உறவை புதிய தலைமுறையுடன் இணைக்கிறது

புதுடெல்லி, நவ.13-

காசி ஒரு நகரம் மட்டுமல்ல, அது பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் பகிரப்பட்ட பண்பாட்டு உணர்வின் சின்னமாக இருந்து வருகிறது. கங்கை நதிக்கரையில் இருந்து தமிழ்நாட்டின் வளமான மரபுகள் வரை, நம்பிக்கை, இலக்கியம், தத்துவம் மற்றும் அறிவு ஆகியவை காசியையும், தமிழ்நாட்டையும் கண்ணுக்கு புலப்படாத ஒரு நூலால் பிணைத்துள்ளன. காசி தமிழ் சங்கமம் 5.0, இந்த வரலாற்று உறவை புதிய தலைமுறையுடன் இணைத்து, வடக்கு மற்றும் தெற்கின் பண்பாட்டு பாரம்பரியத்தை நெருக்கமாகக் கொண்டுவரும் ஒரு தனித்துவமான முயற்சியாகும்.

மொழிகள் வேறுபட்டிருக்கலாம், ஆனால் உணர்வுகள், பாரம்பரியம் மற்றும் இந்தியத்தன்மை ஒன்றுதான். தமிழ்நாட்டிலுள்ள தென்காசி இந்த இணைப்புக்கு ஒரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாகும். இங்குள்ள விஸ்வநாதசுவாமி கோவில், 15 -ம் நூற்றாண்டின் பாண்டிய மன்னர் பராக்கிரம பாண்டியருடன் தொடர்புடையது. கோவில் கல்வெட்டுகளும் இந்த வரலாற்று பாரம்பரியத்தை உறுதிப்படுத்துகின்றன.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பண்டைய இந்திய வரலாறு, கலாசாரம் மற்றும் தொல்லியல் துறையைச் சேர்ந்த டாக்டர் வினய்குமாரின் கூற்றுப்படி, தமிழ் துறவி குமரகுருபரருக்கு காசியுடன் ஆழமான தொடர்பு இருந்தது. அவர் காசியில் உள்ள கேதார்காட்டில் ஒரு மடாலயத்தை நிறுவுவதற்காக அப்போதைய காசி சமஸ்தானத்திடம் இருந்து நிலத்தைப் பெற்றார். மேலும், காசியின் பெருமையைப் போற்றும் ‘காசி கலம்பகம்’ என்ற கவிதையையும் இயற்றினார். இந்த வரலாற்று நிகழ்வுகள், கங்கை நதியில் இருந்து தென்னிந்தியா வரை பரவியுள்ள ஒரு பகிரப்பட்ட கலாசார பாரம்பரியத்தின் கதையைச் சொல்கின்றன.

காசியின் படித்துறைகளில் தமிழ் மொழி, இசை மற்றும் கலையின் சாயல்களைக் காணும்போது, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் கலாசாரப் பிணைப்பாக சுருங்கிவிடுகிறது. காசி தமிழ்சங்கமம் இந்த தனித்துவமான அனுபவத்துக்கான ஒரு தளமாக விளங்குகிறது. இங்கு தமிழ்நாட்டின் வளமான இலக்கிய, இசை, மற்றும் சமையல் மரபுகள் வாரணாசியின் ஆன்மிக பாரம்பரியத்துடன் சங்கமிக்கின்றன. தமிழ்நாட்டில் இருந்து வரும் பிரதிநிதிகளுக்கு, காசியின் கங்கா ஆரத்தி, கோவில்கள், மற்றும் அறிவுப்பாரம்பரியத்தைக் காண்பது ஒரு சிறப்பான அனுபவமாகும். அதே சமயம், காசி மக்களுக்குத் தமிழ் கலாசாரம், மொழி, மற்றும் கலைகளைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. சொற்கள் வேறுபட்டாலும், உணர்வுகள் ஒன்றே. இந்தியாவின் உண்மையான அழகு அதன் பன்முகக் கலாசாரங்களுக்கு இடையிலான நெருங்கிய உறவுகளில்தான் உள்ளது என்பதை இந்த சங்கமம் நிரூபிக்கிறது.

2022 நவம்பரில் பிரதமர் மோடி முதலாவது காசி தமிழ் சங்கமத்தைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து வந்த பிரதிநிதிகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று, வடக்கு மற்றும் தெற்கின் பண்பாட்டு பாரம்பரியத்தை ஆராய்வதற்கான வாய்ப்பை வழங்கினர். இந்த மரபை தொடரும் வகையில், 5-வது காசி தமிழ் சங்கமம் 2026 நவம்பர் 28 முதல் டிசம்பர் 12 வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு, இந்நிகழ்ச்சியின் கருப்பொருள் “திருக்குறள் பயிற்சி” என்பதாகும். மாபெரும் தமிழ் இலக்கிய நூலான “திருக்குறள்” மூலம் அறம், நன்னெறி, நல்லாட்சி மற்றும் மனித விழுமியங்கள் ஆகிய செய்திகளை பரப்புவதில் முக்கியத்துவம் அளிக்கப்படும். திருவள்ளுவரின் காலத்தால் அழியாத படைப்பின் கருத்துகள், இந்த பண்பாட்டு உரையாடலை இலக்கியம் மற்றும் அறிவின் புதிய உயரங்களுக்கு உயர்த்தும்.

காசி தமிழ் சங்கமம், இந்தியாவின் ஒற்றுமையை வெறும் கோஷங்களுக்கு அப்பாற்பட்டு, பரஸ்பர உரையாடல், அனுபவம் மற்றும் பண்பாட்டு பிணைப்பு ஆகியவற்றின் மூலம் மெய்ப்பிக்கும். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மாணவர் காசியின் பாரம்பரியத்தை ஆழமாக அறியும்போதும், வாரணாசியைச் சேர்ந்த ஒரு இளைஞர் தமிழ் இலக்கியத்துடன் பரீச்சயமாகும்போதும், இரு பகுதிகளின் அறிஞர்களும் கலைஞர்களும் தங்கள் மரபுகளைப் பகிர்ந்துகொள்ளும்போதும், மொழித் தொலைவுகள் குறையத் தொடங்குகின்றன. இந்த சங்கமம் என்பது இரு பகுதிகளின் வெறும் சந்திப்பு மட்டுமல்ல, அது இந்தியாவின் பகிரப்பட்ட நாகரிக பாரம்பரியத்தின் கொண்டாட்டமாகும். இங்கு மொழிகள், உணவு, வாழ்க்கை முறைகள் வேறுபடலாம், ஆனால் உணர்வுகள் மற்றும் விழுமியங்களின் வேர்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. கங்கை முதல் காவிரி வரை பரந்து விரிந்திருக்கும் இந்த கலாசாரப் பிணைப்பே இந்தியாவின் உண்மையான அடையாளம். காசி தமிழ் சங்கமம் இந்த கருத்தைக் கொண்டாடுகிறது. காசியும், தமிழ்நாடும் சொல்லும் ஒரே இந்தியாவின் கதைதான் அது.

0Shares