வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வரும் கால்நடைகள்

Loading

வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வரும் கால்நடைகள்
திருவண்ணாமலை, நவ. 10- திருவண்ணாமலை மாநகரில் சாலைகளில் சுற்றித்திரிந்து வரும் கால்நடைகளால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருவதால் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால் திருவண்ணாமலை மாநகரம் தினந்தோறும் பரபரப்புடன் காணப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாநகர பகுதிகளில் உள்ள சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிந்து வருவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் போளூர் சாலை எப்போதும் அதிக அளவில் போக்குவரத்து நிறைந்த சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலையில் கால்நடைகள் கூட்டமாக நின்று போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தியும் வந்ததால் அனைவரும் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
இதேபோல விறிசி சாமியார் ஆசிரமம் பின்புறமுள்ள சமுத்திரம் பகுதி சொர்ணபூமி நகரில் உள்ள 7 தெருக்களிலும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் கூட்டமாக நின்று போக்குவரத்துக்கு இடையூறும் சாலையைக் கடந்து நடந்து செல்லும் குடியிருப்பாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் அதே பகுதியில் பொழுதுபோக்குபூங்கா அமைந்துள்ள பகுதியில் நடைபயணம் மேற்கொள்ளும் சிறுவர்கள் முதியர்வள் தங்களது உயிரை பிடித்துக்கொண்டு நடைபயணம் மேற்கொள்ள வேண்டிய அவலநிலை உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்,சாலைகளில் திடீரென கால்நடைகள் புகுந்து சென்றதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிய நிலையும் ஏற்பட்டது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம், சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகள் மீண்டும் சாலைக்கு வராத வகையில் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0Shares