ஐடிஐ தேர்வில் முழு மதிப்பெண்கள்பெற்ற மூன்று சிறைவாசிகளுக்குப் பாராட்டு

Loading

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைஆய்வு
திருச்சிராப்பள்ளி | 11.10.2026
சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் திருச்சிராப்பள்ளி
சிறைகளில் ஆய்வு – ஐடிஐ தேர்வில் முழு மதிப்பெண்கள் பெற்ற மூன்று
சிறைவாசிகளுக்குப் பாராட்டு; பெண்கள் சிறையில் குழந்தைகள் காப்பகம் திறப்பு
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள்
துறை தலைமை இயக்குநர் முனைவர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள்
09.10.2026 அன்று திருச்சிராப்பள்ளி மத்திய சிறை மற்றும் பெண்கள் சிறப்பு சிறை
ஆகியவற்றைப் பார்வையிட்டு, சிறை நிர்வாகம், பாதுகாப்பு, சிறைவாசிகளின் நலன்
மற்றும் மறுவாழ்வு தொடர்பான பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.

திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் செயல்பட்டு வரும் பேக்கரி பிரிவு, சிறை
சமையலறை, சிறைவாசிகளை அனுமதிக்கும் நடைமுறைகள் மற்றும் சிறைவாசிகளால்
மேற்கொள்ளப்படும் தொழிற்பயிற்சி நடவடிக்கைகள் ஆகியவற்றை அவர் ஆய்வு
செய்தார். மேலும், சிறை வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு தொழிற்பயிற்சி
நிலையத்தை (ITI) பார்வையிட்டு, அங்கு தொழிற்பயிற்சி பெற்று வரும்
சிறைவாசிகளுடன் கலந்துரையாடினார்.

அரசு தொழிற்பயிற்சி நிலைய இறுதித் தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்று
சிறப்பிடம் பெற்ற மூன்று சிறைவாசிகளைத் தலைமை இயக்குநர் பாராட்டி,
அவர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். மேலும், கல்வி மற்றும்
தொழிற்திறன் மேம்பாட்டைத் தொடர்ந்து மேற்கொண்டு, சிறந்த எதிர்காலத்தை
உருவாக்கிக்கொள்ளுமாறு அவர்களை ஊக்குவித்தார். இந்நிகழ்வில் அரசு
தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்
துறையின் மண்டல இணை இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, சிறை வளாகத்திலுள்ள தோட்டத்தைப் பார்வையிட்டு, சிறைவாசிகளால்
மேற்கொள்ளப்பட்டு வரும் காய்கறி சாகுபடிப் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர்

சிறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் கலந்துரையாடி, அவர்களின்
குறைகள், கோரிக்கைகள் மற்றும் பணிசார்ந்த பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி பெண்கள் சிறப்பு சிறைக்குச் சென்ற தலைமை
இயக்குநர், சிறைவாசித் தாய்மார்களுடன் சிறையில் வசிக்கும் குழந்தைகளுக்காகப்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் காப்பகத்தைத் திறந்து வைத்தார். சிறை
வளாகத்தில் வசிக்கும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான, அன்பான மற்றும்
குழந்தைகளுக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துவதே இக்காப்பகத்தின் நோக்கமாகும்.
மேலும், பெண்கள் சிறைவாசிகளுடன் கலந்துரையாடி, குறிப்பாகக் குழந்தைகளுடன்
வசிக்கும் தாய்மார்களின் வாழ்க்கைச் சூழல், அடிப்படை வசதிகள் மற்றும் நலன்
குறித்து கேட்டறிந்தார். பெண்கள் சிறையில் பணிபுரியும் பெண் அலுவலர்கள் மற்றும்
தலைமைக் காவலர்கள், காவலர்களுடனும் கலந்துரையாடி, அவர்களின் குறைகள்
மற்றும் பணிசார்ந்த கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, திருச்சிராப்பள்ளி சரக சிறைகள் துணைத் தலைவர் திருமதி ஆர்.
ராஜலட்சுமி மற்றும் திருச்சிராப்பள்ளி மத்திய சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு)
மற்றும் பெண்கள் சிறப்பு சிறை கண்காணிப்பாளர் திருமதி வி. ருக்மணி பிரியதர்ஷினி
ஆகியோர் உடனிருந்தனர்.

சிறை நிர்வாகத்தை வலுப்படுத்துதல், சிறைவாசிகளின் நலன் மற்றும் மறுவாழ்வு,
தொழிற்திறன் மேம்பாடு, சிறைப் பணியாளர்களின் நலன் மற்றும் சிறையில் வசிக்கும்
பெண்கள் சிறைவாசிகள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான வசதிகளை
ஏற்படுத்துதல் ஆகியவற்றில் தொடர்ந்து ஆதரவும் வழிகாட்டுதலும் வழங்கி வரும்
தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் சிறைகள்
மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறது

சிறைகளில் பாதுகாப்பு மற்றும் சிறந்த நிர்வாகத்தை உறுதி செய்தல், சிறைவாசிகளின்
சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வை மேம்படுத்துதல், சிறைப் பணியாளர்களின் நலனைப்
பேணுதல் மற்றும் பெண்கள் சிறைவாசிகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும்

நலனை உறுதி செய்தல் ஆகியவற்றில் துறையின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை
இவ்வாய்வு எடுத்துரைக்கிறது

0Shares