பணியாளர்களுக்கான வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம்

Loading

சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை பணியாளர்களுக்கான
வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம்
சென்னை, 07.10.2026

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை பணியாளர்களின் நலனை
மையமாகக் கொண்ட அணுகுமுறையின் ஒரு பகுதியாக, காவல்துறை தலைமை
இயக்குநர் / சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர்
முனைவர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும்
துறை பணியாளர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்தி வருகிறார்.
இக்குறைதீர்க்கும் கூட்டத்தில், துறையின் சீருடைப் பணியாளர்கள் மற்றும் அமைச்சுப்
பணியாளர்கள் தங்களது பணிசார்ந்த கோரிக்கைகள், பணியிட மாறுதல்
கோரிக்கைகள் மற்றும் இதர குறைகள் தொடர்பான மனுக்களை துறைத் தலைவரிடம்
நேரடியாக அளித்து தீர்வு காண வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
06.10.2026 அன்று நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில், சுமார் 75 மனுக்கள்
தலைமை இயக்குநர் அவர்களால் நேரடியாகப் பெறப்பட்டன. கடந்த மூன்று
மாதங்களில், சுமார் 750 குறைதீர் மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், அவற்றில்
சுமார் 400 மனுக்களுக்கு உரிய விதிமுறைகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளுக்கு
உட்பட்டு, இந்த வாராந்திர குறைதீர்க்கும் நடவடிக்கையின் மூலம் சாதகமான
முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் ஒவ்வொன்றின் தகுதி மற்றும்
உரிய காரணிகளின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், பணியிட மாறுதல் கோரிக்கைகளைப் பரிசீலிக்கும்போது, தகுதியான மற்றும்
உண்மையான கோரிக்கைகளுக்கு உரிய முன்னுரிமை அளிக்கப்படும் என்றும்,
குறிப்பாக ஒற்றைப் பெற்றோர் (Single Parent), கணவன்–மனைவி இருவரும்
பணிபுரியும் அடிப்படையிலான கோரிக்கைகள் (Spouse Employment Grounds), பணி
ஓய்வை நெருங்கியுள்ள பணியாளர்கள் மற்றும் தீவிர மருத்துவக் காரணங்களைக்
கொண்ட பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து
பரிசீலிக்கப்படும் என்றும் தலைமை இயக்குநர் தெரிவித்தார்.இவ்வாராந்திர குறைதீர்க்கும் நடைமுறையின் மூலம், பணியாளர்கள் தங்களது
குறைகளை துறைத் தலைவரிடம் நேரடியாக எடுத்துரைக்கவும், நியாயமான
கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வு பெறவும், வெளிப்படையான மற்றும் பணியாளர்
நலன் சார்ந்த நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.
சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை பணியாளர்களின் நலனுக்காக
தொடர்ந்து ஆதரவும் வழிகாட்டுதலும் வழங்கி வரும் மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்
பணிகள் துறை தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது

0Shares