கோவில் நகைஒப்படைக்கக் கோரி கிராம மக்கள் மனு
![]()
கோவில் நகை மற்றும் பணத்தை ஒப்படைக்கக் கோரி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு!
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்ட காங்கயம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், தங்கள் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பெரிய மாரியம்மன் கோவிலில் கடந்த 20 ஆண்டுகளாக எந்தவித பிரச்சனையும் இன்றி தர்மகர்த்தாக்கள் மூலம் நிர்வாகம் நடைபெற்று வந்ததாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தர்மகர்த்தாவாக இருந்த செந்தில்குமார் என்பவர், கோவில் பயன்பாட்டிற்காகப் பெறப்பட்ட சுமார் 10 பவுன் நகைகள், ரூ. 3 லட்சம் வைப்புத் தொகை (டெபாசிட்) மற்றும் தீர்மான நோட்டு உள்ளிட்ட ஆவணங்களை தற்போதைய பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்காமல் மறுத்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து மொடக்குறிச்சி காவல் நிலையம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், கோவில் சொத்துக்கள் மற்றும் நகைகளை மீட்டுத் தருவதுடன், கோவிலுக்கு ‘ஊர் பொதுக் கோவில்’ எனப் பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட பலர் திரண்டு வந்து வலியுறுத்தினர்.

