பள்ளி திறப்பு விழா சர்ச்சை குறித்து ஹென்றி கருத்து

Loading

பள்ளி திறப்பு விழா சர்ச்சை: அரசியல் மாண்பும் நாகரிகமும் காக்கப்பட வேண்டும்!

மேயர் பிரியா மற்றும் எம்.எல்.ஏ பல்லவி விவகாரம் குறித்து டாக்டர் ஆ. ஹென்றி கருத்து

சென்னை மாநகராட்சி பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் மாணவர்களின் கல்வி, எதிர்காலம் மற்றும் சமூக முன்னேற்றம் குறித்து பேசப்பட வேண்டிய சூழலில், மக்கள் பிரதிநிதிகளுக்கிடையே ஏற்பட்டதாக கூறப்படும் நடைமுறை முரண்பாடுகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருப்பது வருத்தமளிக்கிறது என்று அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“பள்ளி என்பது ஒரு கட்டிடம் மட்டுமல்ல; அது எதிர்கால தலைமுறையை உருவாக்கும் புனிதமான கல்வி ஆலயம். அத்தகைய கல்வி நிறுவனங்களின் துவக்க விழாக்களில் அரசியல் வேறுபாடுகளை விட மாணவர்களின் நலனும் சமூகத்தின் எதிர்காலமும் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.

பெரம்பூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருமதி பல்லவி அவர்கள் சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த நிலையிலும், மாணவர்களுக்கான நிகழ்ச்சி என்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து விழாவில் பங்கேற்றிருப்பது பாராட்டத்தக்கது. அதேபோன்று சென்னை மாநகர மேயர் திருமதி பிரியா அவர்கள் மாநகரத்தின் முதல் குடிமகளாக தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளார்.

ஆனால் ரிப்பன் வெட்டுதல், குத்துவிளக்கு ஏற்றுதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் ஏற்பட்டதாக கூறப்படும் கருத்து வேறுபாடுகள் மற்றும் அதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவி வரும் காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் ஆளும் கட்சிக்கு எதிர்க்கட்சியாக இருக்கலாம்; ஆனால் எதிரிக் கட்சி அல்ல. ஜனநாயகத்தில் மக்கள் தேர்ந்தெடுத்த ஒவ்வொரு பிரதிநிதிக்கும் சமமான மரியாதை வழங்கப்பட வேண்டும். அதுவே அரசியல் நாகரிகத்தின் அடையாளம்.

திருமதி பிரியா அவர்கள் அரசியல் அனுபவம் பெற்றவர். புதிதாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி பல்லவி அவர்களுக்கு அனைத்து நடைமுறைகளும் முழுமையாக தெரியாமல் இருப்பது இயல்பான ஒன்று. அத்தகைய சூழ்நிலையில் அனுபவம் வாய்ந்தவர்கள் வழிகாட்டும் பொறுப்பை ஏற்க வேண்டும். நிகழ்ச்சிகளுக்கான புரோட்டோகால், முன்னுரிமைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக முன்கூட்டியே தெளிவுபடுத்தப்பட்டிருக்க வேண்டும்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அரசியலில் எதிர் கருத்துடையவர்களையும் மதித்து அணுகியவர். அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தையும் ஜனநாயக மரியாதையையும் காக்க வேண்டும் என்பதே அவரது வாழ்வியல் அரசியல். அந்த மரபை பின்பற்றுவதாக கூறும் அனைவரும் அரசியல் மாண்பை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

இன்று சமூக வலைதளங்களின் காலம். ஒரு சில நொடிகளில் ஒரு நிகழ்வு உலகம் முழுவதும் பரவிவிடுகிறது. எனவே மக்கள் பிரதிநிதிகள் பொதுவெளியில் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்பாடும் அரசியல் பண்பாட்டின் பிரதிபலிப்பாக மாறுகிறது என்பதை உணர வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகம் தனது புதிய மக்கள் பிரதிநிதிகளுக்கு சட்டமன்ற நடைமுறைகள், நிர்வாக நெறிமுறைகள் மற்றும் அரசியல் பண்பாடு குறித்த பயிற்சிகளை வழங்க வேண்டும். அதேபோல் திராவிட முன்னேற்றக் கழகமும் பொதுப் பொறுப்பில் உள்ள தனது நிர்வாகிகளுக்கு அரசியல் நாகரிகம், எதிர்க்கட்சியினருடன் இணக்கமாக செயல்படுதல் மற்றும் பொதுநிகழ்வுகளில் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் குறித்து தொடர்ச்சியான பயிற்சிகளை வழங்க வேண்டும்.

பள்ளி திறப்பு விழாக்கள் அரசியல் சர்ச்சைகளுக்கான மேடையாக அல்ல; மாணவர்களின் கனவுகளை விதைக்கும் சமூக விழாக்களாக இருக்க வேண்டும். மாணவர்கள் முன்னிலையில் ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் ஜனநாயக பண்பாடு வெளிப்பட வேண்டும்.

அரசியலில் வெற்றி பெறுவது மட்டுமே சாதனை அல்ல; அரசியல் மாண்பையும் ஜனநாயக நாகரிகத்தையும் காப்பதே உண்மையான சாதனை என்பதை அனைவரும் உணர வேண்டும்” என்று டாக்டர் ஆ. ஹென்றி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0Shares