கூட்டுறவு துணிநூல் ஆலையில் ம.விஜய் பாலாஜி ஆய்வு
![]()
ஈரோடு
*பள்ளி சீருடை தயாரிப்புப் பணி: கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையில் அமைச்சர் ம.விஜய் பாலாஜி ஆய்வு**
ஈரோடு மாவட்டம், பவானி சாலை, அசோகபுரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையில், கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், பள்ளி சீருடைகள், புத்தகப்பை, கணித உபகரணபெட்டி, வண்ணபென்சில் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கி வருகின்றது. வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் பதனிடும் பணியினை அமைச்சர் நேரில் பார்வையிட்டு, பணிகளின் நிலை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையானது 6.7.1973-ல் பதிவு செய்யப்பட்டு 5.9.1973 முதல் செயல்பட்டு வருகிறது. இவ்வாலையில் துணி வெளுத்தல், சாயமிடல், மெருகேற்றல் மற்றும் அச்சிடல் போன்ற பல்வேறு பதனிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆலையின் துணிகள் பதனிடும் திறன் மாதம் ஒன்றிற்கு 32.50 இலட்சம் மீட்டர் ஆகும். தமிழக அரசின் 2026 – 2027 ஆம் கல்வி ஆண்டுக்கான சீருடை திட்டத்தின் கீழ், இந்த ஆலைக்கு 1.39 கோடி மீட்டர் துணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 1.30 கோடி மீட்டர் கிரே துணிகள் ஆலைக்கு வரப்பெற்று, இதுவரை 1.12 கோடி மீட்டர் துணிகள் பதனிடப்பட்டுள்ளன. மீதமுள்ள துணிகளைப் பதனிடும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை விரைந்து முடித்து, உரிய முகமை நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்குமாறு அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, ஈரோடு மேற்கு சட்டமன்ற உறுப்பினர் கா.க.ஆனந்த் மோகன், ஆலையின் செயலாட்சியர் சிவகுமார், துணை இயக்குநர் மற்றும் ஈரோடு சரக கைத்தறி உதவி இயக்குநர் பெ.சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

