பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலகத்தில் மக்கள் அவதி
![]()
பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் அவதி: முதலமைச்சருக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவசர மனு
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படும் பொதுமக்கள் விரோத செயல்பாடுகள், லஞ்சம் சார்ந்த குற்றச்சாட்டுகள் மற்றும் ஆவண பதிவு தாமதங்கள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு விரிவான கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில், சென்னை பதிவு மண்டலத்திற்குட்பட்ட திருவள்ளூர் பதிவு மாவட்டத்தின் பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் சார்பதிவாளர் திருமதி மகாலட்சுமி அவர்கள் மீது பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் அவமரியாதையாக பேசுவது, தேவையற்ற காரணங்களால் ஆவணங்களை தாமதப்படுத்துவது, பொதுமக்களை காலை முதல் மாலை வரை அலையவைத்து மன உளைச்சலுக்கு உள்ளாக்குவது,
இடைத்தரகர் அமைப்புகள் மூலம் லஞ்சம் கோரப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள், லஞ்சம் வழங்குபவர்களின் ஆவணங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக கூறப்படுவது, லஞ்சம் வழங்காதவர்களின் ஆவணங்கள் நிராகரிக்கப்படுவது அல்லது நிலுவையில் வைக்கப்படுவது போன்ற பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்து வருவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலகம் சென்னையின் மிக முக்கியமான மற்றும் அதிக வருவாய் ஈட்டும் பதிவு அலுவலகங்களில் ஒன்றாக இருந்து வரும் நிலையில், அங்கு பொதுமக்கள் சேவை மனப்பான்மையுடன் நடத்தப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் முதலமைச்சரிடம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்:
சார்பதிவாளர் திருமதி மகாலட்சுமி அவர்களின் செயல்பாடுகள் குறித்து முழுமையான துறைவாரி விசாரணை நடத்த வேண்டும். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களை ஆய்வு செய்ய வேண்டும். லஞ்சம் மற்றும் இடைத்தரகர் முறைகள் தொடர்பாக சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் நலனை பாதிக்கும் செயல்பாடுகள் உறுதி செய்யப்பட்டால் உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை நேரடி பதிவு பணியிலிருந்து மாற்றி நிர்வாகப் பொறுப்புக்கு மாற்ற வேண்டும். பூந்தமல்லி அலுவலகத்தில் மனிதநேயத்துடன் செயல்படும் அதிகாரியை நியமிக்க வேண்டும்.
“பதிவுத்துறை என்பது வெறும் வருவாய் துறை அல்ல; அது மக்களின் வாழ்நாள் நம்பிக்கையை பாதுகாக்கும் சேவைத் துறை” என டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், “அரசு அலுவலகங்கள் மக்கள் அலைக்கழிக்கப்படும் இடமாக அல்ல; மக்கள் நம்பிக்கையுடன் செல்லும் இடமாக இருக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடி தலையீடு செய்து, பொதுமக்களின் நலனை பாதுகாக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது

