1000கட்டணத்தில்வாரிசுபெயர்மாற்றநடைமுறைதேவை
![]()
உத்தரப் பிரதேசத்தைப் போல தமிழகத்திலும் ரூ.1,000கட்டணத்தில் வாரிசு பெயர் மாற்ற நடைமுறை அமல்படுத்த வேண்டும் — தமிழக அரசுக்கு அகிலஇந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி வலியுறுத்தல்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் வீடு மற்றும் மனை உரிமையாளர்கள் மரணமடைந்த பின், அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்களுக்கு சொத்து உரிமை மாற்றம் செய்வதில் பொதுமக்கள் எதிர்கொண்டுவரும் பொருளாதார மற்றும் நிர்வாக சிக்கல்களுக்கு தீர்வாக, உத்தரப் பிரதேச ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (UP-RERA) புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளது.
அதன்படி, வாரிசுதாரர்களுக்கு சொத்து உரிமையை மாற்றுவதற்காக இனி வெறும் ரூ.1,000 மட்டுமே செயலாக்க கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக Regulation 47-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஹென்றி தமிழக அரசுக்கும், தமிழ்நாடு பதிவுத்துறைக்கும், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் (TNRERA) முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போதைய நடைமுறையின்படி, குடும்ப உறுப்பினர்களுக்குள் மேற்கொள்ளப்படும் தான செட்டில்மெண்ட் (Gift Settlement), பாகப்பிரிவினை (Partition), விடுதலை ஆவணம் (Release Deed), ஆக்ரிமெண்ட் செட்டில்மெண்ட் மற்றும் வாரிசு பெயர் மாற்றம் தொடர்பான பல்வேறு ஆவணங்களை பதிவு செய்யும்போது, சொத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் குறைந்தபட்சம் 1% முத்திரைத் தீர்வை மற்றும் 1% பதிவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதனால், பல நேரங்களில் பொதுமக்கள் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை கூட செலவழிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனுடன், ஆவண தயாரிப்பு செலவுகள், சட்ட ஆலோசனை கட்டணங்கள், இடைத்தரகர்கள் மூலம் ஏற்படும் கூடுதல் செலவுகள் மற்றும் அலுவலக அலைச்சல்கள் காரணமாக நடுத்தர மக்கள் மற்றும் சாதாரண குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஒரு குடும்பத் தலைவர் மரணமடைந்த பின், ஏற்கனவே மனவேதனையிலும் பொருளாதார சிரமத்திலும் இருக்கும் குடும்பத்தினரிடம், வாரிசு பெயர் மாற்றம் மற்றும் குடும்ப சொத்து உரிமை மாற்றத்திற்காக அதிகப்படியான கட்டணங்கள் விதிப்பது மனிதநேய அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
எனவே, உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள Regulation 47 திருத்தத்தைப் போலவே, தமிழக அரசும் உடனடியாக புதிய முடிவு எடுத்து, தான செட்டில்மெண்ட், பாகப்பிரிவினை, விடுதலை ஆவணம், குடும்ப உறுப்பினர்களுக்குள் நடைபெறும் சொத்து உரிமை மாற்றங்கள் மற்றும் வாரிசு பெயர் மாற்றங்களுக்கு வெறும் ரூ.1,000 மட்டுமே ஒரே கட்டணமாக நிர்ணயித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும், குடும்ப உறுப்பினர்களுக்குள் நடைபெறும் சொத்து உரிமை மாற்றங்களுக்கு முத்திரைத் தீர்வை மற்றும் பதிவு கட்டணங்களை மிக குறைந்த அளவிற்கு குறைக்க வேண்டும்,தேவையற்ற நடைமுறைகள் மற்றும் அலுவலக தாமதங்கள் நீக்கப்பட வேண்டும்,
இடைத்தரகர்கள் மூலம் பொதுமக்கள் சுரண்டப்படுவதை தடுக்க வேண்டும்,ஆன்லைன் வழியாக வெளிப்படையான மற்றும் விரைவான பதிவு முறைமை கொண்டு வர வேண்டும்,
பதிவுத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, TNRERA மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் இணைந்து எளிய நடைமுறையை உருவாக்க வேண்டும்என தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
வீடு மற்றும் நிலம் என்பது ஒரு குடும்பத்தின் வாழ்நாள் உழைப்பின் பலனாகும். அந்த சொத்துகளை குடும்ப உறுப்பினர்களின் பெயருக்கு மாற்றுவதற்கே மக்கள் கடன் வாங்கி செலவழிக்க வேண்டிய நிலை தொடரக்கூடாது. தமிழக அரசு மக்கள் நலனை முன்னிறுத்தி, மனிதநேய அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுத்து, உத்தரப் பிரதேசத்தைப் போல தமிழகத்திலும் குறைந்த கட்டணத்தில் வாரிசு பெயர் மாற்ற நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி வலியுறுத்தியுள்ளார்.

