உலகம் உன் கையில்1597 மாணவிகளுக்கு மடிக்கணினி

Loading

ஈரோடு
ஈரோடு வேளாளர் கல்வி நிறுவனங்களில் 1597 மாணவிகளுக்கு மடிக்கணினி- மேயர் மற்றும் கவுன்சிலர் வழங்கினார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ‘உலகம் உன் கையில்’ திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்வு மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஈரோடு வேளாளர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவிகளுக்கு இரண்டாம் கட்டமாக மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 10-வது வார்டு மாமன்ற உறுப்பினர் குமரவேல் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் சுமார் 1597 மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலர் மற்றும் தாளாளர் சந்திரசேகர், கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மடிக்கணினிகளை வழங்கி மாநகராட்சி மேயர் பேசுகையில், “ஒரு மடிக்கணினி வாங்குவதற்கு பெற்றோர்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து, அந்தச் சிரமத்தைத் துடைக்கும் வகையில் முதலமைச்சர் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார். மாணவர்கள் இந்த மடிக்கணினியை நல்வழியில் பயன்படுத்தி, படிப்பில் முழுக் கவனம் செலுத்தி தங்களது வாழ்வில் பெரிய இலக்குகளை அடைய வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மாமன்ற உறுப்பினர் குமரவேல் பேசுகையில், “தற்கால சூழலில் படிக்கும் மாணவிகளுக்கு மடிக்கணினி என்பது மிகவும் அவசியமான ஒன்று. அந்த அவசியத்தை உணர்ந்து கல்வியில் முன்னேற மடிக்கணினியை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும்” என மாணவியரிடையே உரையாற்றினார். விலையில்லா மடிக்கணினிகளைப் பெற்றுக் கொண்ட மாணவிகள், தங்களது கல்வி மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
0Shares