ஈரோட்டில் குடியரசு தினம் 26 கி.மீ தூரம் தொடர் ஓட்டம்
![]()
ஈரோட்டில் குடியரசு தினத்தை முன்னிட்டு 26 கி.மீ தூரம் தேசியக்கொடி ஏந்தி i-Fit Club உறுப்பினர்கள் சாதனை தொடர் ஓட்டம்*
ஈரோடு:
இந்தியா 1947-ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பிறகு, மக்களுக்கென தனி அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க நவம்பர் 1946-இல் அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது. டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைவராகவும், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வரைவுக் குழுத் தலைவராகவும் இருந்து 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் விவாதித்து உருவாக்கிய இந்த அரசியலமைப்புச் சட்டம் 26 ஜனவரி 1950-இல் நடைமுறைக்கு வந்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளைப் போற்றும் வகையில், இந்தியாவின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
பொதுமக்களிடையே உடல் வலிமை மற்றும் தேசப்பற்றை வலியுறுத்தும் நோக்கில், ஈரோடு i-Fit Club உறுப்பினர்கள் சுமார் 100 பேர் அதிகாலை 4.30 மணிக்குத் தங்கள் ஓட்டத்தைத் தொடங்கினர். கையில் மூவர்ண தேசியக் கொடியை ஏந்தியபடி 26 கி.மீ தூரம் இடைவிடாது தொடர் ஓட்டம் ஓடி குடியரசு தின வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்த எழுச்சிமிகு தொடர் ஓட்டத்திற்கான ஏற்பாடுகளை i-Fit Club நிர்வாகிகள் மிகச்சிறப்பாக முன்னின்று செய்திருந்தனர். தேசப்பற்றையும் ஆரோக்கியத்தையும் ஒருசேர வலியுறுத்திய இந்த நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

