தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழா பேரணி
![]()
தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழா பேரணி, தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் துவக்கி வைத்து பார்வையிட்டார் :
திருவள்ளூர் டிச 25 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்ற தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழா பேரணியை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் தனியார் கல்லூரியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் கலந்து கொண்ட பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி காமராஜர் சிலை அருகில் நிறைவடைந்தது. பேரணியில் மாணவியர்கள் தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி சென்றனர். மங்கள இசை வாசிப்புடன் பேரணியில் தமிழ் அறிஞர்கள், தமிழார்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினர் கலைக்கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் துவக்கி வைத்து பார்வையிட்டு, பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
மாணவர்கள் அரசின் போட்டித் தேர்வுகள் மட்டுமல்லாது பல்வேறு பொது நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளுக்கான போட்டித்தேர்வுகளில் கவனம் செலுத்தி தமிழக மாணவர்கள் வங்கி, இரயில்வே ஆகிய துறைகளில் அதிகளவில் சேர வேண்டும். ஏனெனில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் போதிய விழிப்புணர்வு இல்லை. இதற்கு ஒன்றிய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதே இந்த தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும் என்று கூறினார். மேலும் 18 வயது பூர்த்தியான மாணவ மாணவியர்களுக்கு வாக்குப்பதிவு செய்வதற்கான படிவம் 6 விண்ணப்பங்களை வழங்கினார்.
பின்னர், பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் பொதட்டூர்பேட்டை ஊராட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி மாணவர்கள் தங்கும் சமூகநீதி விடுதியினை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டு நேரில் பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார்.
இதில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் வே.ரேவதி, கல்லூரி பேராசிரியர்கள், மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) ர.தேவேந்திரன், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் உதவி இயக்குநர் க.விஜயா, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் என்.எம்.கனிமொழி, திருத்தணி வட்டாட்சியர் குமார், தாட்கோ பொது மேலாளர் ரா.சரண்யா, முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் வெங்கடேஷ் குமார், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினர் கலைக்கல்லூரி முதல்வர் அ.ஏகா தேவசேனா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செந்தில்குமார், பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் அற்புதராஜ்,பள்ளிப்பட்டு வட்டாட்சியர் பாரதி, விடுதி காப்பாளர், திரளான கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

