வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு
நீலகிரி குன்னூர் நகராட்சி பகுதி
வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு
நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் நகராட்சி பகுதிகளில் ரூ.3.61 கோடி மதிப்பீட்டிலும், உலிக்கல் பேரூராட்சிப் பகுதிகளில் ரூ.1.97 கோடி மதிப்பீட்டிலும் நடைபெற்று வரும், நடைபெற்று முடிந்த பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
முதலாவதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், குன்னூர் நகராட்சிக்குட்பட்ட உமரி காட்டேஜ் மற்றும் ஓட்டுப்பட்டறை ஆகிய பகுதிகளில் தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் சார்பில் தலா ரூ.1.58 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களையும், காந்திபுரம் பகுதியில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகளையும், மவுண்ட் பிளசண்ட் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய நியாய விலைக்கடையின் கட்டுமான பணியினையும் என மொத்தம் ரூ.3.61 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும், நடைபெற்று முடிந்த பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், குன்னூர் நகராட்சிக்குட்பட்ட ரேலியா அணை தூர்வாரப்பட்டுள்ளதையும், அணையின் நீர் கொள்ளளவையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, மழை நீரை முறையாக சேமித்து, எதிர்வரும் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் விநியோகிப்பது தொடர்பாக துறைச்சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.அதனைத் தொடர்ந்து, உலிக்கல் பேரூராட்சிக்குட்பட்ட செங்கல்புதூர் பகுதிகளில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.17.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தின் கட்டுமான பணியினையும், சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாயக்கூடத்தினையும், நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் உலிக்கல் பேரூராட்சி அலுவலகம் முதல் ஆர்செடின் வரை பலப்படுத்தப்பட்டு வரும் சாலைப்பணியினையும், கிளண்டேல் டிவிசன் பகுதியில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.14.60 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தடுப்புச்சுவருடன் கூடிய நடைபாதை பணியினையும் என மொத்தம் ரூ.1.97 கோடி மதிப்பீட்டிலும் நடைபெற்று வரும், நடைபெற்று முடிந்த பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், உலிக்கல் பேரூராட்சிக்குட்பட்ட செங்கல்புதூர் பழங்குடியின கிராம பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடி, குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்து, பழங்குடியின மக்கள் சந்தைப்படுத்தும் மிளகு, சாம்பிராணி, தேன் உள்ளிட்ட பொருட்களை பார்வையிட்டார்.
இந்த ஆய்வுகளின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) முகமது ரிஸ்வான், குன்னூர் நகராட்சி ஆணையாளர் சசிகலா, குன்னூர் நகரமன்றத்துணைத்தலைவர் வசீம்ராஜா, சிறப்பு பகுதி மேம்பாட்டுத்திட்ட உதவிப் பொறியாளர் குமார், உலிக்கல் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில், உலிக்கல் பேரூராட்சித்தலைவர் ராதா, குன்னூர் நகராட்சிப் பொறியாளர் வேலுசாமி, திட்டக்குழு உறுப்பினர் ராமசாமி உட்பட பலர்
உடனிருந்தனர்.