மருதூர்குறிச்சி ஊராட்சி பகுதியில் கிராம சபை கூட்டம்
![]()
கன்னியாகுமரி
உள்ளாட்சி தினத்தையொட்டி, மருதூர்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியம், மருதூர்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பிலாவிளை அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (01.11.2025) நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, அக்கோரிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி பேசுகையில்:-
தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க உள்ளாட்சி தினமான (01.11.2025) அன்றுகன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தின் நோக்கம் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே எடுத்து கூறுவதேயாகும்.
அதனடிப்படையில் இன்று மருதூர்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பிலாவிளை அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சிறப்பு கிராம சபைக்கூட்டத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். மருதூர்குறிச்சி ஊராட்சியானது 3.15 ச.கி.மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்ஊராட்சியானது 1970ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மருதூர்குறிச்சி ஊராட்சியில் 9 வார்டுகளும், 15 குக்கிராமங்களும் உள்ளன. ஊராட்சியில் ஆண்கள் 2768 நபர்களும், பெண்கள் 2811 என மொத்தம் 5579 நபர்களும் வசிக்கின்றனர். மேலும் 2079 வீடுகள் காணப்படுகின்றன. மருதூர்குறிச்சி ஊராட்சியில் 342 குடும்பங்கள் வறுமைக்கோட்டு கீழ் உள்ளது. தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட தாயுமானவர் திட்டத்தின் நோக்கமே வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்புகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் இணைந்து பயன்பெற உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் நமது ஊராட்சி தூய்மையாக உள்ளது. மருதூர்குறிச்சி ஊராட்சியில் 25 கிணறுகளும், 6 பொது நல்லிகள், 17 கைப்பம்புகள், 9 ஆழ்கிணறுகள், 27 சிறு மின்விசைத் தொட்டிகள், 10,000 லிட்டர் கொள்ளவு கொண்ட 5 தொட்டிகள், 20,000 லிட்டர் கொள்ளவு கொண்ட 4 தொட்டிகள், 30,000 லிட்டர் கொள்ளவு கொண்ட 6 தொட்டிகள், 60,000 லிட்டர் கொள்ளவு கொண்ட 4 தொட்டிகள் உள்ளதால், பொதுமக்களுக்கு குடிநீரானது தட்டுப்பாடு இன்றி கிடைக்கிறது.
தொடர்ந்து ஒவ்வொருவரும் தாங்கள் குடியிருக்கும் பகுதிகளில் முழு சுகாதாரத்தை கடைபிடித்திடவும். உங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கேட்டுப் பெறவும் முன் வர வேண்டும். தற்போது, மழை காலம் ஆரம்பித்து விட்டதால், தங்களது. வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும் தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்குவதை கண்காணிக்க வேண்டும். நோய்கள் பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகுவதை தடுப்பதற்கு தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து நோய் பரவுவதை தடுக்க முன்வரவேண்டும்.
மேலும் ஊராட்சியின் தெருவிளக்குகளை முறையாக பயன்படுத்துதல். குறிப்பிட்ட நேரத்தில் விளக்குகளை எரிய வைத்தல் அணைத்தல். தேவையின்றி வெளிச்சம் உள்ள நேரங்களில் மின்விளக்குகளை எரியவைப்பதை தவிர்தல், வீட்டிலுள்ள மின் சாதனங்களை முறையாக பயன்படுத்துதல் மற்றும் குடிநீர் தொட்டியில் நீர் ஏற்றும் போது, நீர் நிரம்பிய உடன் அணைக்க வேண்டும். ஊராட்சியிலுள்ள பொதுமக்கள் தங்களுடைய வீட்டுவரி, சொத்துவரி ஆகிய விவரங்கள் சரியாக உள்ளதா என்பதையும், தங்களது கைப்பேசி எண்கள் சரியாக உள்ளீடு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்த்திட வேண்டும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இழிவான பொருள் தரும் சாதிப்பெயர்கள் கொண்ட குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் பிற பொது இடங்களில் உள்ள பெயர்களை நீக்கி, புதிய பொருத்தமான பெயர்களை வழங்க வேண்டுமென அறிவுறுத்தியதன் அடிப்படையில் மருதூர்குறிச்சி ஊராட்சியில் கட்டியேற்றி காலனி, திட்டைக்காலனி, சேரிக்கடை உள்ளிட்ட மூன்று ஊர்களின் பெயர்களில் உள்ள சாதியப்பெயர்கள் நீக்கம் செய்ய, அரசாணை பிறப்பிக்கப்படவுள்ளது. மருதூர்குறிச்சியில் 1 பள்ளியும், 3 திருமண மண்டபங்கள் உள்ளன. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் 1206 நபர்கள் பதிவுபெற்றுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் அதிகளவு பணிகள் மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.
தொடர்ந்து தொழிலாளர் நல வாரியத்தில் தினக்கூலியாக வேலைக்கு செல்லும் பெரியோர்கள், ஆண்கள், இளைஞர்கள் நீங்கள் செய்யும் வேலையின் அடிப்படையில் உள்ள வாரியத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்யும் போது 60 வயது நிறைவடைந்த பின் முதியோர் ஓய்வூதியம், மகன் அல்லது மகள் திருமணத்திற்கு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம் அடைந்தால் உதவித்தொகை, கண்கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் இணைந்து பயனடையலாம். எனவே மருதூர்குறிச்சி ஊராட்சிக்குட்பட்டவர்கள் கண்டிப்பாக தொழிலாளர் நல வாரியத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மேலும் பெண்கள் அனைவரும் கண்டிப்பாக சுயஉதவிக்குழுக்களில் சேர்ந்து, பயன்பெறலாம். தற்போது சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாளஅட்டை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த சுயஉதவிக்குழு அடையாள அட்டை வைத்திருக்கும் உறுப்பினர்களுக்கு அரசு பேருந்துகளில் 25 கிலோ வரையிலான பொருட்களுக்கு கட்டணம் இலவசம், கோ ஆப்டெக்ஸ் துணிகள் கொள்முதல் விலையில் தள்ளுபடி, கடனுதவி திட்டங்களில் முன்னுரிமை, சலுகை விலையில் ஆவின் நிறுவன பொருட்கள், இணைய சேவை மையங்களில் 10 சதவீதம் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அன்புகரங்கள் திட்டத்தின் கீழ் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள், பெற்றோர் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டு சென்ற குழந்தைகள், பெற்றோர் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோர் உடல்ரீதியாகவும் மனரீதியகாவும் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெற்றோர் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோயுடன் வாழ்ந்து வரும் குழந்தைகள் என பெற்றோர்களை இழந்த 18 வயது வரையிலான பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நமது ஊராட்சியில் இந்த மாதிரியான குழந்தைகள் இருந்தால் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரும்படி வட்டாட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டது. குழந்தைகளுக்கு கெதிரான பாலியல் வன்கொடுமை சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. எனவே பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் மனம் விட்டு பேச வேண்டும். குடும்பங்களில் உள்ள அனைவரும் மனம் விட்டு பேசினால் தான் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.
மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் 04.11.2025 முதல் 04.12.2025 வரை ஒவ்வொரு வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவம் வழங்கப்படவுள்ளது. உங்கள் வீட்டிற்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் உங்கள் வீட்டில் 18 வயதுக்கு மேல் எத்தனை பேர் உள்ளீர்கள் என்பதை தெரிவித்து, அதாவது வெளியூரில் உங்கள் பிள்ளைகள் வசித்தாலும், அவர்களுக்கு இங்கு வாக்காளர் அட்டை வேண்டுமென்றால் அவர்களுக்கும் சேர்த்து நீங்கள் விண்ணப்ப படிவத்தினை பெற்றுக்கொள்ளுங்கள். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் பேசினார்கள்.
நடைபெற்ற கூட்டத்தில், உதவி இயக்குநர் ஊராட்சிகள் திரு.அன்பு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி திருமதி.சுசீலா பீட்டர், இணை இயக்குநர்கள் திரு.ஜெங்கின் பிரபாகர் (வேளாண்மை), மரு.முகம்மது கான் (கால்நடை), துணை இயக்குநர்திருமதி.கீதா (வோளண்மை விற்பனை குழு), மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் திருமதி.விஜயமீனா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.சித்ராதேவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி.சகிலா பானு, கல்குளம் வட்டாட்சியர் திரு.சுனில், உதவி இயக்குநர் தோட்டக்கலை திரு.சரண்யா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், கன்னியாகுமரி மாவட்டம்.

