அஜாக்கிரதையாக கையாண்ட துப்பாக்கி … பெண் படுகாயம்: எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்!

Loading

விருத்தாசலம் அருகே துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பெண் படுகாயம் அடைந்த சம்பவத்தில் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.அதுமட்டுமல்லாமல் முறையாக விசாரணை நடத்தாத எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விருத்தாசலம் அடுத்த கம்மாபுரத்தை சேர்ந்தவர் வீரபாண்டியன். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 22-ந் தேதி வீரபாண்டின் விடுமுறையில் கம்மாபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்தபோது அவரது குழந்தைகள் கேட்டதற்காக பலூன் சுடும் ஏர்கன் துப்பாக்கி ஒன்றை வாங்கி வந்துள்ளார்.

பின்னர் அந்த துப்பாக்கியை வீரபாண்டியன் பயன்படுத்தியபோது அஜாக்கிரதையாக கையாண்டதாக கூறப்படுகிறது. இதனால் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய ரப்பர் குண்டுகள் அவரது தாய் பத்மாவதி கால் மற்றும் தொடைகளில் பாய்ந்து படுகாயம் அடைந்ததார்.

இதையடுத்து விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் அவரது கால் மற்றும் தொடைகளில் இருந்த ரப்பர் குண்டுகள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இது பற்றிய தகவல் அறிந்த கம்மாபுரம் போலீசார் மறுநாள் வீரபாண்டியன் வீட்டுக்கு சென்று அங்கிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். ஆனால் விசாரணை நடத்தவில்லை என தெரிகிறது. பின்னர் இது குறித்து உளவுத்துறை தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்த போலீஸ் உயர் அதிகாரிகள் கம்மாபுரம் போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

அதன் பேரில், கம்மாபுரம் போலீசார் நேற்று மாலை வீரபாண்டியனை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து து தீவிர விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

இந்த நிலையில், துப்பாக்கி குண்டு பாய்ந்து பெண் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், போலீஸ்காரர் சரவணன் ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்காததால் இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கடலூர் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

0Shares