எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்கும் பேச்சுக்கே இடமில்லை:
எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்கும் பேச்சுக்கே இடமில்லை:மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்

எந்த மாநிலத்தின் மீதும் அல்லது சமூகத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தேசிய கல்விக் கொள்கை 2020 மொழி சுதந்திர கோட்பாட்டை கொண்டுள்ளது என்றும், மாணவர்கள் அவர்கள் விரும்பும் மொழியில் படிக்கும் வாய்ப்பை தொடர உறுதி செய்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பயிற்றுவிப்பதை வலுப்படுத்துவது இந்த கொள்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளமான மொழிப் பாரம்பரியத்திற்கு மதிப்பளிப்பது தேசிய கல்விக் கொள்கையின் மையப்புள்ளியாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார். மாணவர்கள் தங்களின் தாய்மொழியில் தரமான கல்வியைப் பெற இந்த கொள்கை உறுதி செய்கிறது என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர், தமிழ் என்பது ஒரு மாநில அடையாளம் அல்ல என்றும் தேசிய பொக்கிஷம் என்றும் கூறியுள்ளார்.
மும்மொழிக் கொள்கை என்பது 1968-லிருந்து இந்தியாவின் கல்விக் கட்டமைப்பின் முதுகெலும்பாக இருந்துள்ளது. துரதிருஷ்டவசமாக இது வெற்றிகரமான கல்விக் கொள்கைகளின் ஒரு பகுதியாக இல்லாததும், உண்மையான உணர்வுடன் அமல்படுத்தப்படாததும் பள்ளிகளில் இந்திய மொழிகளில் முறைப்படியான பயிற்றுவிப்பு குறைவதற்கு வழி வகுத்து விட்டது. இதன் காரணமாக அந்நிய மொழிகளை அதிகம் சார்ந்திருக்க செய்ததோடு, மாணவர்கள் தங்களின் மொழி வேர்களை கண்டறிவது மட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழ் உட்பட இந்திய மொழிகள் அனைத்தும் கல்வியில் உரிய இடம் பெறுவதை உறுதி செய்து வரலாற்று ரீதியான பிழையை தேசிய கல்விக் கொள்கை 2020 சரி செய்வதாக திரு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
சமூக மற்றும் கல்வி முன்னேற்றத்தில் தமிழ்நாடு எப்போதும் வழிகாட்டியாக இருந்துள்ளது என்றும், இந்தியாவில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தங்கள் சிலவற்றில் முன்னோடியாக இருந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். நவீன கல்வியை வடிவமைத்தல், விளிம்புநிலை சமூகங்களை உயர்த்துதல், அனைவரையும் உள்ளடக்கிய கற்றல் சூழலை வளர்த்தல் ஆகிய இயக்கங்களில் தமிழ்நாடு முன்னணியில் இருந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், அரசியல் காரணங்களுக்காக தேசிய கல்விக் கொள்கை 2020 தொடர்ந்து எதிர்ப்பதால், தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களும், ஆசிரியர்களும், கல்வி நிறுவனங்களும் இந்த கொள்கை வழங்கும் ஏராளமான வாய்ப்புகளையும், வளங்களையும் பெற முடியாமல் போகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கொள்கை நெகிழ்வுத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், மாநிலங்கள் தங்களின் தனித்துவமான கல்வித் தேவைகளுக்கு பொருத்தமாக இதனை அமலாக்க அனுமதிக்கிறது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும், மத்திய அரசு உதவியுடனான சமக்ரா சிக்ஷா போன்ற திட்டங்கள் தேசிய கல்விக் கொள்கை 2020-வுடன் இணைந்தவை என்பதோடு, பிஎம் ஸ்ரீ பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கையின் முன்மாதிரிப் பள்ளிகளாக உருவாக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தங்களின் அரசியல் காரணங்களுக்காக குறுகிய பார்வையுடனும், முற்போக்கான கல்வி சீர்திருத்தங்களை அச்சுறுத்தலாக்குவதுடனும், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ இந்த மாநிலம் ஆய்வு செய்வது பொருத்தமற்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மோடி அரசால் மேம்படுத்தப்பட்டுள்ள ஒத்துழைப்பு கூட்டாண்மை உணர்வை முழுவதும் நிராகரிப்பதாக பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதம் உள்ளது என்றும், இந்த கொள்கை எந்த மொழியையும் திணிக்க யோசனை தெரிவிக்கவில்லை என்றும் திரு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். பிஜேபி அரசு இல்லாத பல மாநிலங்கள் அரசியல் கருத்து வேறுபாடுகளை கடந்து தேசிய கல்விக் கொள்கையின் முற்போக்கான கொள்கைகளை அமல்படுத்துகின்றன என்றும் இந்த கொள்கை கல்வி தளத்தை விரிவாக்குவதை நோக்கமாக கொண்டது, குறுக்குவதை அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இதனை பார்க்க வேண்டும் என்றும், நமது இளம் மாணவர்களை மனதில் கொண்டு வரலாற்று ரீதியாக இதனை அணுக வேண்டும் என்றும், உங்களை அன்போடு நான் கேட்டுக் கொள்கிறேன் என்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
நமது நாட்டு கல்வி முறையின் எதிர்காலத்தை நோக்கிய பொறுப்புமிக்க உணர்வுடனும், மிகுந்த மதிப்புடனும் இந்த கடிதத்தை எழுதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.