தமிழ்நாடு, அசாம், கர்நாடக மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை நவீனப்படுத்த ரூ.5,000 கோடி ஒதுக்கீடு

Loading

தமிழ்நாடு, அசாம், கர்நாடக மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை நவீனப்படுத்த ரூ.5,000 கோடி ஒதுக்கீடு உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு கூட்டத்தில் அறிவிப்பு
 PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு, பல்வேறு மாநிலங்களுக்கான ஏராளமான பேரிடர் தணிப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. நிதியமைச்சர், வேளாண் அமைச்சர், நிதி ஆயோக் துணைத் தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவின் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது. ஆறு நகரங்களில் நகர்ப்புற வெள்ளத்தை எதிர்த்துப் போராடவும், 4 மலை மாநிலங்களில் பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளத்தைத் தணிக்கவும், 3 மாநிலங்களில் தீயணைப்புத் துறையை வலுப்படுத்தவும் தேசிய பேரிடர் தணிப்பு நிதி மற்றும் தேசிய பேரிடர் நிவாரண நிதி ஆகியவற்றிலிருந்து மொத்தம் ஒன்பது முன்மொழிவுகளை இந்த உயர்நிலைக் குழு பரிசீலித்தது. அனைத்து 28 மாநிலங்களிலும் யுவ ஆப்தா மித்ரா திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் குழு பரிசீலித்தது.
இந்த உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், தெலங்கானா, குஜராத், கர்நாடகா, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் புனே ஆகிய ஆறு பெருநகரங்களில் நகர்ப்புற வெள்ள மேலாண்மைக்காக ரூ.2514.36 கோடி மதிப்பீட்டிலான ஆறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. முன்னதாக, சென்னை மாநகரில் ரூ.561.29 கோடி மதிப்பீட்டில் வெள்ள மேலாண்மைக்கான ஒருங்கிணைந்த தீர்வுகளுக்கான திட்ட முன்மொழிவுக்குஇந்தக் குழு கடந்த நவம்பர் 27, 2023 அன்று ஒப்புதல் அளித்தது.
தமிழ்நாடு, அசாம், கர்நாடகாவிற்கு “மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் நவீனமயமாக்குதல்” திட்டத்தின் கீழ் ரூ .810.64 கோடி மொத்த ஒதுக்கீட்டில் மூன்று திட்டங்களுக்கு உயர் நிலைக் குழு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்திற்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் மொத்தம் ரூ.5,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ரூ.1691.43 கோடி மொத்த ஒதுக்கீட்டில் 11 மாநிலங்களின் திட்டங்களுக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.470.50 கோடி மதிப்பீட்டில் யுவ ஆப்தா  மித்ரா திட்டம் முன்மொழிவுக்கும் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் நாட்டின் மிகவும் பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் 315 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் 1300 பேருக்கு தலைமைப் பயிற்சியாளர்களாகவும், தேசிய மாணவர் படை, தேசிய சாரணர் சங்கம், நேரு யுவ கேந்திர சங்கம் மற்றும் பாரத சாரண சாரணியர் இயக்கம் ஆகியவற்றிலிருந்து பிரத்யேகமாக 2.37 லட்சம் தன்னார்வலர்களுக்கு பேரிடர் தயார்நிலை மற்றும் எதிர்வினை ஆகியவற்றிலும் பயிற்சி அளிக்கப்படும்.
நடப்பு நிதியாண்டில், மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 14 மாநிலங்களுக்கு ரூ.6,348 கோடியும், மாநில பேரிடர் தணிப்பு நிதியின் கீழ் 06 மாநிலங்களுக்கு ரூ.672 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 10 மாநிலங்களுக்கு ரூ.4265 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *