அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி மனம் திறந்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார்
தமிழக அரசு கொண்டு வந்து நடைமுறைப்படுத்தியுள்ள புதிய திட்டமான “ஆன்லைன் மூலம் உடனடி கட்டட திட்ட அனுமதி” திட்டத்திற்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி மனம் திறந்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இந்த மகத்தான மற்றும் வெகுமக்கள் பயன்பெறும் திட்டத்தை துவக்கி வைத்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து நடைமுறைப்படுத்தியுள்ள தமிழக அரசுக்கு தமது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து, அகமகிழ்ச்சியுடன் – மனம் திறந்து பாராட்டி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்..
பெருமதிப்பிற்கும் – மரியாதைக்கும் – போற்றுதலுக்கும் உரிய தமிழ்வேள், முத்தமிழறிஞர், செம்மொழி காவலர், டாக்டர். கலைஞர் அவர்களின் அறவழியில், நாடும் – ஏடும் – நாளும் போற்றும் வகையில், தூக்கத்தை துச்சமென மதித்து, அல்லும் – பகலும் அயராது உழைத்து, தமிழகத்தை நாளும் முன்னோடி மாநிலமாக மாற்றி வரும் தமிழகத்தின் தன்னிகரற்ற முதல்வர், மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியில்,
தங்களின் கரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திருமிகு. சு.முத்துசாமி அவர்களின் முன்னெடுப்பில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க முன்னோடி திட்டங்களை கொண்டு வந்து ஒற்றைச் சாளர முறையில், எளிய வகையில் பொதுமக்களுக்கு தமது சேவையினை வழங்கி வருகிறது.
குறிப்பாக கடந்த 22.07.2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆகிய தங்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள 2500 சதுரடி பரப்பளவு உள்ள மனையில் 3500 சதுரடி வரை, (2 அலகு) தரை தளம் மற்றும் முதல் தளம் வரை கட்டப்படும் கட்டிடங்களுக்கு “எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையதளம் வாயிலாக ஒற்றைச் சாளர முறையில் (தானியங்கி முறையில் – தாமாக) உடனடி கட்டட திட்ட அனுமதி பெறும் திட்டம்” பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
குறிப்பாக தற்பொழுது கட்டட திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்கின்றவர்களில் கிராமப்புறங்களில் 72 சதவீதம் பொதுமக்களும், பேரூராட்சி பகுதிகளில் 77 சதவீதம் பொதுமக்களும், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் 79 சதவீதம் பொதுமக்களும் இந்த திட்டத்தின் மூலம் உடனடியாக பயன்பெறுவார்கள்.
இதனால் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை தவிர்த்து வேறு எந்த விதமான வீண் விரயங்களும் ஏற்படாது. உரிய கால நேரத்துடன் எல்லோரும் எளிய முறையில் அனுமதி பெற முடியும், சொந்த இல்லக் கனவுகள் நினைவாகும் வகையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் கடன் பெற்று தங்களின் கனவு இல்லங்களை கட்டுவதற்கு பெரும் வாய்ப்பாக அமையும்! பொதுமக்கள் மத்தியில் பெருமளவில் கட்டட திட்ட அனுமதி குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படும், இதன் மூலம் அனுமதியற்ற கட்டிடங்கள் உருவாகாத நிலை வரும். இதனால் துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு பெருமளவில் வேலை பளு குறையும்.
மேலும் பெருமளவில் வணிக பயன்பாட்டிற்காக கட்டுனர்கள் மற்றும் அபிவிருத்தியாளர்களால், கட்டடத் திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்கும் திட்டங்களுக்கும், முன்னெடுக்கும் திட்டங்களுக்கும் விரைவில் அனுமதி பெறுவதற்கு இது நல் வாய்ப்பாக அமையும்.
ஆகவே மேற்கண்ட வரலாற்று சிறப்புமிக்க பல முன்னோடி திட்டங்களை தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையில் கொண்டு வந்து, வெகுமக்கள் பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்தியமைக்காக, மேற்கண்ட எமது அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில், மாண்புமிகு தமிழகத்தின் தன்னிகரற்ற முதல்வராகிய தங்களுக்கும், தங்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் நாளும் செயலாற்றும் மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை – சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அமைச்சர் அவர்களுக்கும், TNHUD செயலாளர், DTCP இயக்குனர் உள்ளிட்ட பெருமக்களுக்கும், பொதுமக்களின் சார்பிலும் எமது அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பிலும் மனம் திறந்த பாராட்டுக்களையும், இதயபூர்வமான வாழ்த்துக்களையும், நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.
மேலும் மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் அவர்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.