மின்னணு கொள்முதல் முறையின் அமலாக்கம் மீதான செயலாக்க தணிக்கை
1) மின்னணு கொள்முதல் முறையின் அமலாக்கம் மீதான செயலாக்க தணிக்கை
மார்ச் 2022 உடன் முடிந்த ஆண்டிற்கான மின்னணு கொள்முதல் முறையின் அமலாக்கம் மீதான செயலாக்க தணிக்கை குறித்த, இந்திய தணிக்கை துறை தலைவரின் அறிக்கை வெளியிட்டார் D.ஜெய்சங்கர் IAAS.
மின்னணு கொள்முதல் இணையதளத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவோ அல்லது கண்காணிக்கவோ பொறுப்பு மையம் ஏதும் ஏற்படுத்தவில்லை.
மாநிலத்தில் உள்ள அனைத்து கொள்முதல் நிறுவனங்களும் பொருட்கள் மற்றும் சேவைகளை மின்னணு இணையதளத்தின் மூலம் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்கவில்லை. குறிப்பிட்ட அரசு அறிவுறுத்தல்கள் இல்லாததால், இந்த இணையதளம் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்தும் 74 விழுக்காடு கொள்முதல் நிறுவனங்கள் அதனை செயல்படுத்தாமலேயே செயல்பட்டன.
இதனால் டெண்டர் செயல்முறையின் வெளிப்படை தன்மையும், நடுநிலைத் தன்மையும் பாதிக்கப்பட்டுள்ளது. கைமுறையிலான பதிவுகளையே தொடர்ந்து சார்ந்து இருக்கக்கூடிய நிலையும் தமிழகத்தில் உள்ளது.
மின்னணு கொள்முதல் இணையதளம் குறித்து ஒப்பந்ததாரர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் , அதில் பதிவு செய்ய அவர்களை ஊக்குவிக்கவும் இத்தளத்தினை நிர்வகிக்கும் நிதித் துறையோ அல்லது பயனர் துறைகளோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
தமிழ்நாடு ஒப்பந்த வெளிப்படை தன்மை விதிகள் பரிந்துரைக்கப்பட்ட காலவரம்புகளை அரசுத்துறைகள் பின்பற்றவில்லை.
ஏல சுழற்சி, குடும்ப உறுப்பினர்களே வெவ்வேறு ஏலதாரர்களாக பங்கேற்றது, கொள்முதல் நிறுவனத்தின் கணினிகளில் இருந்து ஒப்பந்த புள்ளி சமர்ப்பித்தல், வெவ்வேறு ஏலதாரர்கள் ஒரே ஐபி முகவரியிலிருந்து ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பித்தல், ஒப்பந்த முறைகேடுகளை குறிக்கும் தொடர்ச்சியான இ எம் டி ஆவண எண்கள் மற்றும் முறையற்ற வணிகக் கூட்டமைப்பு போன்ற முறைகேடான ஏலம் முறைகள் கண்டறியப்பட்டுள்ளன.
ஏலதாரர்கள் இடையே இருந்த இது போன்ற மோசடியான நடைமுறைகளாலும், டெண்டர் செயல் முறையில் அதிகாரிகளின் தோல்விகளாலும், அரசின் முயற்சிகளான ஏலதாரர் பங்கேற்பை அதிகரித்தல் , செலவை குறைத்தல், வெளிப்படை தன்மை மற்றும் கொள்முதல் முறையை மேம்படுத்தல் ஆகியவை பாதிக்கப்பட்டன.
2) தணிக்கை துறை அறிக்கை (வருவாய்)
2021- 22இல் தணிக்கை மேற்கொண்டதில் 149 கோடி ரூபாய் மதிப்புள்ள குறைவு மதிப்பு குறைவு வசூல் வருவாய் இழப்பு போன்றவை கண்டறியப்பட்டுள்ளன.
111 இனங்களில் 992 கோடி அளவில் தவறுகள் தணிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
டாஸ்மாக் நிறுவனம் ஆயத்தீர்வை வரியாக 30 கோடி ரூபாயை செலுத்தவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக் நிறுவனம், மதுபானங்களுக்கான விலைகளை அதிகபட்சமாக உயர்த்தியுள்ளது . இது தொடர்பாக டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிராக கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
மதுபானங்களைக் கொண்டு செல்ல தேர்வு செய்யப்பட்ட போக்குவரத்து ஏலதாரர்களிடம் ஜிஎஸ்டி எண், மோட்டார் வாகன காப்பீடு போன்ற இடத்தில் பங்கு பெறுவதற்கான அடிப்படை ஆவணங்கள் இல்லை என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரே ஆட்கள் மீண்டும் மீண்டும் ஏலத்தில் தேர்வு பெற்றதால், ஏல விண்ணப்பங்கள் கார்டல் முறையில் நடக்கிறதோ என்ற கேள்வி எழுகிறது.
மதுபான சில்லறை கடைகளில் நிறுவப்பட்டுள்ள 5359 பி எஸ் ஓ கருவிகளில், 3114 மட்டுமே செயல்படுகின்றன. இதனால் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன என தெரிவித்துள்ளார் .