அண்ணா பல்கலைக்கழகத்தில் மண்டல சமூக வானொலி விழா

Loading

சமூக வானொலி விதிமுறை மாற்றங்களால் இதன் எண்ணிக்கை விரைவில் 480-லிருந்து 1000-ஆக மாறும்: மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் நம்பிக்கை

 PIB Chennai

இந்தியாவில் சமூக வானொலியின் 20 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மண்டல சமூக வானொலி விழா இன்று நடைபெற்றது. உலக வானொலி தினமாகவும் கொண்டாடப்படும் இந்த விழாவிற்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும், இந்திய வெகுமக்கள் தொடர்பு நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இந்த விழாவில் காணொலி காட்சி மூலம் சிறப்புரையாற்றிய  மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், வானொலியின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டுதான் பிரதமர் திரு நரேந்திர மோடி “மனதின் குரல்” நிகழ்ச்சியை தொடங்கி கோடானுகோடி மக்களுடன் உரையாடி வருகிறார் என்றும், அவர்களின் மனஉணர்வுகளை அறிந்து வருகிறார் என்றும் கூறினார்.

சமூக வானொலி என்பது மக்களுடன் மிக நெருக்கமாக இருக்கிறது என்றும், குரலற்றவர்களின் குரலாக இருப்பதோடு உள்ளடக்க விஷயங்களை உள்ளூர் மொழிகளில் தருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். 2047-ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை எட்டுவதில்  மக்களின் பங்கேற்புக்கு சமூக வானொலி முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் அவர் கூறினார்.

சமூக வானொலி திட்டத்திற்கு மறைந்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா வாஜ்பாய் 2002-ல் ஒப்புதல் அளித்தார் என்பதையும், அண்ணா பல்கலைக்கழகத்தின் 2004-ம் ஆண்டு முதலாவது சமூக வானொலி அமைக்கப்பட்டது என்பதையும் திரு அனுராக் தாக்கூர் நினைவுகூர்ந்தார். 2014 வரை நாட்டில் 140 ஆக இருந்த சமூக வானொலி நிலையங்களின் எண்ணிக்கை 2024-ல் 481 ஆக அதிகரித்துள்ளது என்றும், இவற்றில் தென் மண்டலத்தில் மட்டும் 117 சமூக வானொலி நிலையங்கள் இருக்கின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சமூக வானொலி நிலையங்களை அமைப்பதற்கான விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், ஒரு அமைப்பு ஒன்றுக்கும் அதிகமான வானொலி நிலையங்களைக் கொண்டிருக்கலாம் என்றும், உரிம காலம் 5 ஆண்டு என்பது 10 ஆண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். விளம்பரத்திற்கான நேரம் 7 நிமிடங்களிலிருந்து 10 நிமிடங்களாக மாற்றப்பட்டுள்ளது என்றும், 10 விநாடிகளுக்கான விளம்பரக் கட்டணம் 52 ரூபாயிலிருந்து 74 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இப்படிப்பட்ட மாற்றங்கள் காரணமாக சமூக வானொலி நிலையங்களின் எண்ணிக்கை விரைவில் ஆயிரத்தைத் தாண்டும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். சமூக வானொலி நிலையங்களின் பயன்பாடுகளை மேம்படுத்த ஆலோசனைகள் தமது அமைச்சகத்தால் வரவேற்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

இந்த விழாவில் குரல் பதிவு வழியாக உரையாற்றிய மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களின் அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு 2500 கோடி ரூபாய் வழங்கியிருப்பதாகவும், இது தகவல் தொடர்பு முறையை வலுப்படுத்தவும் உதவும் என்றார். மலை, கடல், காடு என நாட்டின் எல்லைப்பகுதிகளில் உள்ள கிராமங்கள் கடைசி கிராமங்கள் அல்ல, அவை முதல் கிராமங்கள் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் கருத்துக்கு ஏற்ப இத்தகைய கிராமங்களில் சமூக வானொலி நிலையங்களை செயல்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.

மண்டல அளவில் தொழில்நுட்ப மற்றும் நிகழ்ச்சி மேம்பாட்டுடன் தூர்தர்ஷனில் புதிதாக தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதை அடுத்து உலகம் முழுவதும் அதன் வீச்சு அதிகரித்துள்ளது என்று அமைச்சர் கூறினார். மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

சமூக வானொலி நிலையங்கள் தொடங்க 10 லட்சம் ரூபாய் வரை அரசு நிதியுதவி வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

இந்த விழாவில் இந்திய வெகுமக்கள் தொடர்பு நிறுவனத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு நிமிஷ் ரஸ்தோகி, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் திரு ஜே.பிரகாஷ், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக அதிகாரி திருமதி கௌரி சங்கர் கேசர் வாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *