சென்னைபிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு பொங்கல் தொகுப்பை பரிசாக வழங்கும் விழா
சென்னை பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு பொங்கல் தொகுப்பை பரிசாக வழங்கும் விழா
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நன்னாளை முன்னிட்டு CHENNAI PRESS CLUB – சென்னை பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு பொங்கல் தொகுப்பை பரிசாக வழங்கும் விழாவானது நேற்று (12.01.2024) வெள்ளிக்கிழமை காலை சுமார் 11 மணி அளவில் சென்னை நந்தனத்தில் உள்ள ஆந்திரா சேம்பர் ஆப் காமர்ஸ் உள் அரங்கத்தில் நடைபெற்றது.
சென்னை பிரஸ் கிளப் பொதுச் செயலாளர் ச.விமலேஷ்வரன் அவர்களின் வரவேற்புரையோடு துவங்கிய அவ்விழாவில், தி இந்து நாளிதழின் முன்னாள் தொழிற்சங்க தலைவரும், மூத்த மற்றும் முன்னணி பத்திரிகையாளருமான இ.கோபால் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சென்னை, திருப்பதி, கோவை, திருப்பூர், திருச்சி என தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சென்னை பிரஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் விழாவில் கலந்து கொண்ட சக பத்திரிகை அமைப்புகளின் தலைவர்கள் அனைவருக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பு பரிசை வழங்கி கௌரவித்தார். அப்போது ஏற்புரை ஆற்றிய அவர் சென்னை பிரஸ் கிளப் கடந்து வந்த பாதைகள் குறித்தும், இனிவரும் காலங்களில் பத்திரிகையாளர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்தும், கடந்த கால தன் அனுபவங்களை நிகழ்கால பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் நலச்சங்க பொதுச் செயலாளரும், மூத்த ஒளிப்பதிவாளருமான பெ.வஜ்ஜிரவேல் அவர்கள், பேசும்போது மூத்த பத்திரிகையாளர்களுடன் ஒருங்கிணைந்து இளம் பத்திரிகையாளர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப சிறப்புடன் செயல்பட்டு வரும் சென்னை பிரஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் விழாவில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார். நிகழ்ச்சியின்போது பேசிய சென்னை பிரஸ் கிளப் கௌரவ ஆலோசகரும், மூத்த பத்திரிகையாளருமான புகாரி செரீப் அவர்கள் பேசும்போது, கடந்த ஆண்டுகளில் சென்னை பிரஸ் கிளப்பின் செயல்பாடுகள் சிறப்புடன் திகழ்வதாகவும், தொடர்ந்து தொய்வில்லாமல் பணிகள் தொடர நிர்வாகிகள் அனைவரும் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்தும் தனது கருத்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார்.
அரங்கு நிறைந்த கூட்டத்தோடு நடைபெற்ற அவ்விழாவில் சென்னை பிரஸ் கிளப் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான அ.செல்வராஜ் மற்றும் துணைத் தலைவர் ந.செல்வராஜ் ஆகியோர் விழா சிறப்புரையாற்ற, துணை தலைவர் ராஜன் பாபு அவர்கள் நன்றியுரை தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில் சென்னை பிரஸ் கிளப் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்ட 2024 ஆம் ஆண்டிற்கான முதல் நிர்வாகிகள் கூட்டமும் நடைபெற்றது.