மக்களவையில் ராகுல் காந்தி  கடும் தாக்கு

Loading

முதலில் மணிப்பூர், பிறகு ஹரியாணா
“நாட்டையே எரிக்க முயல்கிறீர்கள்”
மக்களவையில் ராகுல் காந்தி  கடும் தாக்கு
புதுடெல்லி, ஆக.10-
மணிப்பூரை இந்தியாவின் பகுதியாக பிரதமர் மோடி கருதவில்லை என்றும், மணிப்பூரில் இந்தியாவை பாஜக கொன்றுவிட்டது என்றும் மக்களவையில் வயநாடு எம்.பி. ராகுல் காந்தி காட்டமாக பேசினார்.
மணிப்பூர் விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான 2-வது நாள் விவாதம்  நேற்று  நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 12 மணிக்கு தனது பேச்சைத் தொடங்கினார். அவையில் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜக உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். “சபாநாயகர் அவர்களே, முதலில் மீண்டும் என்னை மக்களவையில் இணைத்துக் கொண்டதற்கு நான் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தொடங்கிய ராகுல் காந்தி பேசியது:
“கடந்த முறை நான் பேசியபோது அதானியை குறித்து பேசியது உங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கலாம். உங்கள் மூத்த தலைவர்கள் வேதனை அடைந்திருக்கலாம். அந்த வேதனை உங்களையும் பாதித்திருக்கலாம். அதற்காக நான் உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால், நான் உண்மையைப் பேசினேன். இன்று நான் அதானி பற்றி பேசப் போவதில்லை’ மணிப்பூர் பற்றியே பேசப் போகிறேன் என்பதால் எனது பாஜக நண்பர்கள் அச்சப்பட வேண்டிதில்லை.
இன்று நான் எனது மனதில் இருந்து பேச விரும்புகிறேன். நான் அரசின் மீது தாக்குதல் நடத்தப்போவதில்லை. அதனால் நீங்கள் அமைதியாக இருங்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான எனது இந்திய ஒற்றுமை யாத்திரை இன்னும் முடியவில்லை. நான் யாத்திரை சென்றபோது என்ன நோக்கத்துக்காக யாத்திரை செல்கிறீர்கள் என்று என்னைக் கேட்டார்கள். நான் அன்பைச் செலுத்துவதற்குத் தான் இந்த நடைபயணத்தை மேற்கொண்டேன் என்று புரிந்துகொண்டேன். இதன் மூலம் நான், என் மனதில் இருந்து வெறுப்பை அகற்றிவிட்டு அன்பை நிறைத்து வைத்துள்ளேன். இந்த நடைபயணத்தின்போது இந்தியாவில் விவசாயிகள் நிலை மோசமாக இருப்பதை உணர்ந்தேன்.
நான் மணிப்பூர் சென்றேன். பிரதமர் ஒருமுறை கூட மணிப்பூர் செல்லவில்லை. பிரதமர் மோடிக்கு மணிப்பூர் மாநிலம் என்பது இந்தியாவின் பகுதியாக இல்லை. மணிப்பூரை இரண்டாக பிரித்து வைத்துள்ளார் பிரதமர் மோடி. நீங்கள் மணிப்பூரில் இந்தியாவைக் கொலை செய்துள்ளீர்கள். இந்தியா என்பது நமது மக்களின் குரல்.
நீங்கள் மணிப்பூரில் அந்தக் குரலைக் கொலை செய்துள்ளீர்கள். மணிப்பூரில் பாரத மாதாவை கொலை செய்திருக்கிறீர்கள். நீங்கள் மணிப்பூர் மக்களைக் கொலை செய்திருக்கிறீர்கள். நீங்கள் இந்தியாவைக் கொலை செய்திருக்கிறீர்கள். நீங்கள் துரோகிகள்… தேச பக்தர்கள் அல்ல!
என் அம்மா இங்கே அமர்ந்திருக்கிறார். நீங்கள் என்னுடைய இன்னொரு அம்மாவை மணிப்பூரில் கொலை செய்தீர்கள். இந்திய ராணுவத்தால் ஒரேநாளில் மணிப்பூரில் அமைதியை கொண்டுவர முடியும். ஆனால், நீங்கள் அதைச் செய்யவில்லை. இந்தியாவின் குரலைக் கேட்க மோடி தயாராக இல்லை.
இலங்கை அனுமனால் எரிக்கப்படவில்லை; மாறாக ராவணனின் ஆணவத்தால் எரிந்தது. ராமனால் ராவணன் கொல்லப்படவில்லை. ஆணவத்தால் ராவணன் கொல்லப்பட்டார். நீங்கள் மொத்த நாட்டையும் எரிக்க விரும்புகிறீர்கள். முதலில் மணிப்பூர், பிறகு ஹரியாணா. நீங்கள் நாட்டையே எரிக்க முயற்சி செய்கிறீர்கள்” என்று ராகுல் காந்தி பேசினார்.
இதனைத் தொடர்ந்து ராஜஸ்தானில் நடக்கும் ஒரு பேரணியில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி கிளம்பிச் சென்றார். போகும்போது எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்துவிட்டுச் சென்றார்.
ராகுல் காந்தி பேசும்போது, அவருக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பிக்கொண்டிருந்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *