மண்ணெண்ணை குண்டு வீச்சு எதிரொலியாக ஜேடர்பாளையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!
மண்ணெண்ணை குண்டு வீச்சு எதிரொலியாக ஜேடர்பாளையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!
மண்ணெண்ணெய் குண்டு வீச்சு, தீ வைப்பு சம்பவங்களால் ஜேடர்பாளையம் சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் ஜேடர்பாளையத்தில் கடந்த சில வாரத்திற்கு முன்பாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நித்யா என்ற பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் இறப்பில் வட மாநிலத்தவர் தொடர்பு இருப்பதாக அவரது உறவினர்கள் ஆட்சியர் அலுவலக முற்றுகை மற்றும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.பின்னர் 17 வயதான சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து இந்த பிரச்சனை ஊடாக கபிலர்மலையில் வட மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல ஜேடர்பாளையம் சரளைமேடு பகுதியில் வட மாநிலத்தவர் தங்கி இருந்த குடிசைகளின் மீதும் தீவைப்பு சம்பவம் நடத்தப்பட்டது. இதில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ஜேடர்பாளையம் துரைசாமி என்பவரது ஆலை கொட்டகையில் நெருப்பு வைக்கப்பட்டதில் 3 டிராக்டர்கள் எரிந்து சாம்பலாகின. அதே இரவு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி வீட்டில் மண்ணெண்ணை குண்டு வீசப்பட்டது. அதனை தொடர்ந்து பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜேடர்பாளையம், வடகரை ஆத்தூர், கரப்பாளையம் உள்ளிட்ட பல பகுதியில் போலீஸ் இரவு, பகல் ரோந்தும் தீவிர படுத்தப்பட்டு உள்ளது. இரவு முழுதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் வரும் அனைத்து வாகனங்களும் தீவிர வாகன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.