14 கிலோ கஞ்சா பறிமுதல் சென்னையை சேர்ந்த 3 பேர் கைது
ஆந்திராவில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வழியாக கஞ்சா கடத்தி வருவதாக மாவட்ட எஸ்பி., பா.சிபாஸ் கல்யாணுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதனை அடுத்து திருவள்ளூர் மாவட்ட சிறப்பு பிரிவு போலீசார் திருத்தணி பொன்பாடி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்தை சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த மூன்று நபர்களிடம் விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 14 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் சென்னை பெரியார் நகரை சேர்ந்த சுதாகர், கோடம்பாக்கத்தை சேர்ந்த சரத், அலமாதியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து சட்ட விரோதமாக கஞ்சாவை கடத்தி வந்த அவர்களிடமிருந்து 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.